அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! யாழில் சிறைச்சாலைகள் அமைச்சர் மாரப்பன...


விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் திலக் மாரப்பன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முறையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும், நீதிமன்றங்களில், வழக்குகள் பத்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்ற வேடிக்கை நிகழ்வதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கின்றார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால், யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் திலக் மாரப்பன அங்கு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



எல்ரீரீஈ சந்தேக நபர்கள் என்பதற்காக அவர்களுக்கென வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நாட்களாக சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

ஏனென்றால் யுத்தம் முடிந்துவிட்டது, இப்பொழுது அவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூற முடியாது. அவ்வாறு எவரேனும் அச்சுறுத்தலாக இருப்பார்களாயின் அவர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதித்து அவர்களைக் கண்காணிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியும், பிரதமரும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், காவல்துறை அதிகாரிகள், யாழ் மாவட்டத்தின் நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் முன்னதாக பருத்தித்துறையில் காவல் நிலையத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றையும் திறந்து வைத்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் முனைப்பு இன்னும் இல்லை: அமைச்சர் மாரப்பன

ஜெனீவா யோசனையின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் அதன்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இதனை செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் இதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்மாட்டார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாம் அறிந்த வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் இன்னும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! யாழில் சிறைச்சாலைகள் அமைச்சர் மாரப்பன... Reviewed by Author on November 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.