இளையோர் உலககிண்ணம் மேற்கிந்திய வசமானது....
19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுக்களால் இந்திய அணியை வீழ்த்திய மேற்கிந்திய அணி முதற்தடவையாக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 19ஆவது உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகள் மிர்பூர் மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியா களத்தடுப்பைத் தெரிவு செய்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. இதனால் இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற ஆரம்பித்தது. இந்திய அணியின் ரிசப்பன்ட் (01), அன்மோல் பிரீத்சிங் (03), அணித்தலைவர் இஷான்கிஷன் (04), வாஷிங்டன் சுந்தர் (07), அர்மான் ஜபர் (05) ஆகியோர் அடுத்தடுத்து அரங்கு திரும்பினர். சப்ராஷ் கான் 51 ஓட்டங்களையும், பெத்தம் 21 ஓட்டங்களையும் பெற்றனர். இதனால் இந்தியா 45.1 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மேற்கிந்தியாவின் ஜோசப், ஜோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் போல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனால் 146 ஓட்டங்கள் எடுத்தால் கிண்ணத்தை தமதாக்கமுடியும் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியாவின் ஆரம்ப விக்கெட்டுக்களும் அடுத்தடுத்து இழக்கப்பட்டன. இருப்பினும் கியாசி கார்ட்டி மற்றும் கீமோ போல் ஆகியோர் அபாரமான இணைப்பாட்டத்தை வழங்கினர். கார்ட்டி ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், கீமோ போல் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதி செய்தனர். இதனால் மேற்கிந்தியா 49.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.
தோல்வியை சந்திக்காமல் இந்த தொடரில் வீறுநடைபோட்டு வந்த இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கிண்ணத்தை இழந்ததோடு மேற்கிந்தியா முதற்தடவையாக இளையோர் உலக கிண்ணத்தை தனதாக்கி சாதித்தது. போட்டியின் ஆட்டநாயகனாக கார்ட்டி தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் வீரர் ஹசன் மிராஷ் தெரிவானார்.
இளையோர் உலககிண்ணம் மேற்கிந்திய வசமானது....
Reviewed by Author
on
February 15, 2016
Rating:
Reviewed by Author
on
February 15, 2016
Rating:


No comments:
Post a Comment