முல்லைத்தீவு மாவட்டத்தில் 571 மில்லியன் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம்....
முல்லைத்தீவு மாவட்டத்தில் 571 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு தொகுதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு அமைச்சினால் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விளையாட்டு மைதான தொகுதிகள் 571 மில்லியன் செலவில் உள்ளக விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், விளையாட்டரங்குடன் கூடிய விளையாட்டுத் தொகுதி என்பன அமைக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வந்த இச் செயற்திட்டம் தற்போது முடிவுறும் நிலையில் உள்ளது.
2013ம் ஆண்டு முல்லைத்தீவுக்கென இவ் விளையாட்டுத் தொகுதி அமைப்பதற்கு 15 ஏக்கர் காணி கோரப்பட்டு ஒட்டிசுட்டான் வனப்பகுதி தெரிவுசெய்யப்பட்டது.
வனபரிபாலனத்திணைக்களத்தின் ஒப்புதலுக்காக கோரிக்கை விடப்பட்டு கடந்த 3 வருட காலமாக வனபரிபாலனத்திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெறாமையினால் மாற்று வழிகளும் தெரிவு செய்யப்படாத நிலையில் இத்திட்டம் கைவிடப்படும் நிலையில் இருந்தது.
இந்நிலையினைக் கருத்தில் கொண்டு கடந்த ஒரு மாதப்பகுதியில் துரிதமாகச் செயற்பட்டு அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதம கணக்காளர் மி.யேசு ரஜினோல்ட், பிரதேச செயலாளர், மாவட்ட விளையாட்டுக்கிளை, பிரதேச காணிக்கிளை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சி காரணமாக முல்லைத்தீவு நகருக்கண்டியதாக முல்லைத்தீவு, மாங்குளம் வீதிக்கு அண்மையில் 2வது மைல்கல்லுக்கருகாமையில் 14 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டு தேசிய விளையாட்டுத் தொகுதி அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒதுக்கப்பட்ட காணியில் உடனடியாக 571 மில்லியன் செலவில் உள்ளக விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், விளையாட்டரங்குடன் கூடிய விளையாட்டுத் தொகுதி அமைப்பதற்கான நடைவடிக்கைகளை தேசிய விளையாட்டு அமைச்சு மேற்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 571 மில்லியன் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம்....
Reviewed by Author
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment