உயிருக்கு போராடிய கணவன், மனைவியை காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த சூர்யா,,,
பிரபல நடிகர் சூர்யா, ‘எஸ்-3’ என்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கி தனது காரில் ஏற்றி அவர்களை சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சூர்யா ‘எஸ்-3’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் நடந்து வருகிறது. சித்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்புக்கு போய் நடித்து வந்தார். வழக்கம் போல் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது வழியில் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கிய கணவன்- மனைவி இருவர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். மோட்டார் சைக்கிள் சற்று தள்ளி சேதமடைந்து கிடந்தது. ஏதோ ஒரு வாகனம் அவர்களை இடித்து விட்டு சென்றதால் இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது.
சூர்யா இருவரை பார்த்ததும் காரை நிறுத்தி ஓடோடி சென்றார். தனது உதவியாளர் மற்றும் டிரைவரையும் அழைத்தார். இரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கிப்போய் தனது காரில் ஏற்றினார். அவர்களை சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு பெண்ணுக்கு பலத்த அடிபட்டு இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சூர்யாவிடம் தெரிவித்தனர். அறுவைச் சிகிச்சை வசதி திருப்பதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறது என்றும் கூறினார்கள்.
சூர்யா உடனடியாக நகரியில் வசிக்கும் நடிகை ரோஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு திருப்பதி ஆஸ்பத்திரியில் உள்ள குறிப்பிட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
ரோஜாவும் டாக்டரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சூர்யா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வான் ஏற்பாடு செய்து கணவன்-மனைவியை திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கிய கணவன் மனைவிக்காக ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர் ஆஸ்பத்திரியிலேயே இருந்து விட்டு பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
உயிருக்கு போராடிய கணவன், மனைவியை காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த சூர்யா,,,
Reviewed by Author
on
April 06, 2016
Rating:

No comments:
Post a Comment