அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களும் கூட்டமைப்புக்குள் அடங்கியுள்ள அரசியல் கட்சிகளும் வெறுப்புக் கொண்டுள்ளமை வெளிப்படை.

இத்தகைய நிலைமைகளுக்கு காரணம் கூட்டமைப்பின் தலைமை எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல; மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக- இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் காரணமாக முப்பது ஆண்டு கால போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்று அரசியல் ரீதியில் அநாதைகளாக உள்ளனர்.

இருக்கின்றவர்களும் தமிழ் மக்களின் கஷ்டங்களை, துன்பங்களை உளமார உணராதவர்களாக இருப்பதன் விளைவாக அவர்கள் ஆளும் தரப்புடன் ஒத்தூதவே முற்படுகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் காரணம் தமிழர்களின் அரசியல் தலைமை என்பது கொழும்பைத் தளமாக -கொழும்பை வாழ்விடமாக-கொழும்பில் பொருளாதார வளத்தைக் கொண்டதாக இருப்பது என்பதுதான் கண்டறியப்பட்ட உண்மை.

எனவே கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல் தலைமையால் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் கவனம் இருக்கமாட்டாது.

மாறாக ஆளும் தரப்புடன் சேர்ந்து போவதே தங்கள் சுயநலனுக்கு ஒத்ததாக இருக்கும் என்று அவர்கள் முடிவெடுப்பார்.

இது தவிர கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட தமிழ் அரசியல் தலைமையை தனது நலனுக்காக பயன்படுத்துவது அரசுக்கும் சுலபமாக இருப்பதால், கொழும்பு தமிழ் அரசியல் தலைமையால் தமிழ் மக்கள் எந்தப் பயனையும் அடையமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம்.

எனவேதான் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனமும் கிடைக்கவில்லை என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.

ஆக, தமிழ் மக்கள் இந்த நிலைமைகளை தற்போது மிகத்தெளிவாக அறிந்துள்ளனர்.

எனவே இத்தகைய நம்பிக்கையீனங்கள் தொடராத வகையில் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளில் முக்கியமான இரண்டு விடயங்கள் உண்டு.

அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்தல். கூட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்து அடுத்த ஒரு நல்ல தலைமையை அறிமுகப்படுத்தி, வெளியில் நிற்கக்கூடிய தமிழ்ப்பற்றுள்ளவர்களையும் உள்வாங்கி கொழும்புத் தலைமை என்ற நிலையில் இருந்து மாற்றி தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையாக அதனை மாற்றுதல்.

இந்த முயற்சியை செய்யவே முடியாது. கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஒரு சிலரை திருத்தவே இயலாது என்று அறுதியாக நம்பினால் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய தமிழ்ப்பற்றாளர்களையும் உள்ளடக்கியதான புதிய கட்டமைப்பை புதிதாக உருவாக்கவேண்டும்.

இந்த விடயங்களில் ஏதாவது ஒரு விடயத்திற்கு வந்தாவது காலத்தின் கட்டாய அவசியமாகும்.

இதை நாம் செய்யாமல் எங்கள் அரசியல் தலைமைகள் சரியானவை அல்ல என்று குறை கூறுவதால் எந்தப் பிரயோசனமும் ஏற்படமாட்டா.

அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தாம் சார்ந்த கூட்டமைப்பில் தவறான வழிநடத்தல்கள் இடம்பெறுகின்றன என்றவுடன் அதனைச் சரிப்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தியிருக்கவேண்டும்.

எனினும் அவர்கள் தங்களை ஓரம் கட்டுகிறார்கள் என்ற நினைப்போடும் வெளியில் நிற்பதான மனநிலையோடும் இருந்தமையும் கூட்டமைப்பின் பாதை மாறிய பயணத்திற்கு காரணம் எனலாம்.
valampuri
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டும் Reviewed by NEWMANNAR on June 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.