தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை-அதிர்ச்சித் தீர்ப்பு!
திருகோணமலை குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 இராணுவ வீரர்கள் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.குறித்த வழக்கு இன்று அநுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு, 11 .02. 1996 அன்று இரவு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர், 39 பேர் காயமடைந்தனர்.
மது போதையில் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்த தமிழர்கள்.
இந்த படுகொலை வழக்கில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குறித்த 8 பேரும், சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.
அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கருதி சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட 121 பேர் சாட்சிகளாக மூதூர் பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வந்த இந்த விசாரணைக்கு குறித்த சாட்சிகளில் 20 பேர் அழைக்கப்பட்டுள்ள போதிலும் 16 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஏனைய நான்கு பேரும் மரணமடைந்து விட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
ஆனபோதிலும் தற்போது குறித்த இராணுவ வீரர்கள் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை அனைவர் மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை-அதிர்ச்சித் தீர்ப்பு!
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:

No comments:
Post a Comment