ராஜிவ் கொலையாளிகளுக்கு கிடைக்குமா விடுதலை?
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து, சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவரு மான ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த, ஏழு பேரையும் விடுதலை செய்ய, 2014ல், தமிழக அரசு முடிவு செய்தது.
தங்களை ஆலோசிக்காமல், தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.
அதை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆண்டு, டிசம்பரில் தீர்ப்பு அளித்தது.
அமர்வு பிறப்பித்த உத்தரவு
ராஜிவ் கொலை குறித்து, சி.பி.ஐ., விசாரித்தது சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில், குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு அல்லது முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக, மாநில அரசு தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது.
மத்திய அரசின் ஆலோசனையைப் பெற வேண்டும். இந்த 'ஆலோசனை' என்பதை, 'ஒப்புதல்' பெற வேண்டும் என்றுபொருள் கொள்ள வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியது.
அதிகாரம் இல்லை
சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில், வழக்கறிஞர் யோகேஷ் கன்னா, மறு சீராய்வு மனுவை, நேற்று தாக்கல் செய்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில், மத்திய அரசின் ஆலோசனை பெற வேண்டும் என்பதற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது சட்டப்படி, இது தவறு.
மேலும், முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனையை குறைப்பது என்பது மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம். இதில் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்த முடியாது.
மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான, இந்த தீர்ப்பு, குற்ற நடைமுறைசட்டத்துக்கும் எதிரானது.
மத்திய அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதை, மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்று, சட்டப் பிரிவுகளை மாற்றி அமைக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை.
மறுபரிசீலனை:
குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்ட வர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில், சட்டப் பிரிவுகளுக்கு இவ்வாறு புதிய விளக்கத்தை அளித்தது தவறு.
இவ்வாறு விடுதலை செய்யப்படும் நபர்களால், பிரச்னைகள் ஏற்பட்டால், அதை சமாளிப்பதும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
அதனால், அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மறு சீராய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே, ராஜிவ் கொலையாளிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியவரும்.
அடுத்த வாரம்:
ராஜிவ் கொலை வழக்கில், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், தங்களை விடுதலை செய்ய வேண்டுமென, ஏழு பேரும் தாக்கல் செய்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு, மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
- Dina Malar
ராஜிவ் கொலையாளிகளுக்கு கிடைக்குமா விடுதலை?
Reviewed by Author
on
July 28, 2016
Rating:

No comments:
Post a Comment