90 வயதில் 4 தங்கப்பதக்கங்கள் - முதியவர் சாதனை....
திருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் உவர்மலையைச் சேர்ந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை என்ற முதியவர் 4 தங்கப்பதக்கங்களை தனதாக்கி சாதனை படைத்துள்ளார்.
இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம், மத்திய மாகாண வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கத்தினருடன் இணைந்து நடத்திய 9ஆவது வருடாந்த போட்டி கடந்த வாரம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 5,000 மீற்றர் வேகநடை,100 மீற்றர், 200 மீற்றர் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளார்.
1924ஆம் வருடம் மட்டக்களப்பில் பிறந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை, பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடத்தப்படும் மரதன் ஓட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வெற்றிகளை தனதாக்கிக் கொண்டார்.
6 ஆண் பிள்ளைகளின் தந்தையாகிய இவர் தொடர்ந்து விளையாட்டுத் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். 2014ஆம் வருடம் நுவரெலியாவில் நடைபெற்ற போட்டியிலும் 5000 மீற்றர், வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர், நீளம் பாய்தல், போட்டிகளில் பங்கு கொண்டு தங்கப்பதக்கத்தை பெற்றிருந்தார்.
இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் அல்பிரட் நொயல் செல்லப்பிள்ளை வருங்கால சமுதாயம் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு மாவட்டத்திற்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இளையவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.
அடுத்த வருடம் பங்குனி மாதம் கொழும்பில் நடைபெற உள்ள அடுத்த போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ள அவர், இந்த போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல முதியவர்களை அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளார் என அறிய முடிகின்றது.
90 வயதில் 4 தங்கப்பதக்கங்கள் - முதியவர் சாதனை....
Reviewed by Author
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment