திசைமுகம் நோக்கிய சம்பந்தரின் திருமுகம்
தனு, கரண, புவன போகங்களைப்படைத்த சிவன் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் எனும் ஐந்தொழில்களை செய்வதாக சைவ சமயம் கூறுகிறது.
இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு சிவனின் ஐந்தொழிலே காரணமாகும் என்பது சைவசமயம் கூறி நிற்கும் தத்துவம்.
ஒருவடிவில்; ஓர் உருவில் ஐந்தொழிலையும் செய்தல் சாத்தியமற்றது என்பதால் ஐந்தொழிலையும் செய்யும் இறைவன் அதற்கேற்றால் போல் வடிவங்களையும் தாங்கிக் கொள்கிறான்.
உருத்திரனாக நின்று அழித்தல் தொழிலை செய்யும் சிவப்பரபொருள் அருளலை செய்வதற்காக சதா சிவ வடிவத்தை எடுத்துக்கொள்கின்றார். இந்த வேறுபட்ட வடிவங்கள் வேறுபட்ட தேவையின் பொருட்டு இறைவனால் எடுக்கப்படுகின்றது. இதை இறைவன் மட்டுமே செய்யமுடியும்.
மனிதர்கள் செய்தால் அதற்கு திருகுதாளம் என்று பொருள்படும். பொதுவில் அரசியலில் இத் திருகுதாளங்கள் நடப்பது வழமை ஆயினும் ஒரு அரசியல்வாதி - அரசியல் தலைவன் தன் இனத்திற்கு ஈனம் இழைக்கும் வகையில் திருகுதாளம் செய்தால் அதற்கு வோறோர் பொருள் உண்டு.
சமகாலத்தில் அந்தப் பெயர் எங்கள் தாயகத்தில் அடிக்கடி பேசப்பட்டது என்பதாலும் அந்தச் சொல்லையும் அதன் பொருளையும் நம் இளம் சந்ததி அறியாமல் விடுதல் நன்று என்பதாலும் இதனை வெளிப் படுத்தாமல் அப்படியே விட்டுவிடலாம்.
இது ஒருபுறம் இருக்க வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த போர்குற்றம் தொடர்பில் இடம்பெறவுள்ள விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பது இனப் பற்றுள்ள தமிழ் மக்களின் உறுதியான முடிவு.
இந் நிலையில் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் அனுமதியோம் என்கிறது இலங்கை அரசு.
நிலமை இதுவாக இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரு மான இரா.சம்பந்தர் அவர்கள் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் போர்க்குற்ற விசா ரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தமாட்டோம் என்று கூறியதாக செய்தி வெளிவந்தது.
இந்த செய்தியை சில தமிழ் ஊடகங்கள் வெளியிட்டபோது அவ்வாறு தான் கூறவில்லை அப்படிக் கூறவும் முடியாது என்று இரா.சம்பந்தர் தெரிவித்ததாக பிறிதொரு செய்தி வெளியாகியது.
நல்லது! கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தரின் இந்தக் கூற்று, பஞ்சகிருத்தியத்தில் எடுத்தவடி வம் போன்றதா என்பது ஆராயப்படவேண்டும்.
வடக்கில் ஒருவடிவம்; தெற்கில் இன்னொருவடிவம், கிழக்கில் பிறிதொரு கோலம் என்றவாறு சம்பந்தர் ஐயாவின் திருமுகங்கள் திசை முகத்திற்கேற்ப மாறுகிறதா என்பதும் அறியப்படுவது மிகமிக அவசியம்.
இந்த ஆராய்வில் தமிழ் இனம் ஈடுபட்டு உண்மையை கண்டறியாவிட்டால் எங்கள் இனத்தின் பேரழிவு இனியும் தொடரும் என்பது உண்மை. இது ஒருபுறம் இருக்க தான் சொல்லாததை சொன்னதாக பிரசுரித்த குறித்த சிங்கள ஊடகத்திற்கு எதிராக சம்பந்தன் ஐயா வழக்குத் தொடுப்பாரா? அவ்வாறு வழக்கு தொடுக்காவிட்டால் அதற்கு என்ன காரணம் என்பதை அறிய தமிழ் மக்கள் விரும்புவதில் தவறில்லை தானே!
திசைமுகம் நோக்கிய சம்பந்தரின் திருமுகம்
Reviewed by NEWMANNAR
on
July 16, 2016
Rating:

No comments:
Post a Comment