அண்மைய செய்திகள்

recent
-

குண்டுகளை வீசி அழித்தவர்களே அதனை விசாரிக்கும் நீதிபதிகள்:தமிழர்களுக்கு கிடைக்குமா நீதி ?


தமிழ் மக்கள் மீது யார் கொத்துக்குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசி அழித்தார்களோ அவர்களேதான் இப்போது அதனை விசாரித்து தமிழர்களுக்கு நீதி வழங்குகின்ற நீதிபதிகள் இப்படியென்றால் அந்த நீதி எப்படி இருக்கும்? தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றியத்தின் விளையாட்டுக் கழகம் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (15) மாலை 3.00 மணியளவில் உருத்திரபுரத்தில் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது உரையின் போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இங்கு நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகளில் எமது இளைஞர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

ஓர் அணி வெற்றி பெற மற்றைய அணி வெற்றியை இழந்தது. வெற்றி தோல்வி என்பது ஒரு வீரனது வாழ்க்கையிலே வந்து போவது வழமை.

இன்று தோல்வி அடைந்தவர் நாளை வெற்றி பெறுபவார். எமது இளைய வீரர்கள் விளையாட்டுக்களில் வெற்றி தோல்வியை மதித்து நடக்க வேண்டும்.

அதுவே விளையாட்டு வீரனுக்கு அழகு. இவ்விடத்திலே அதிகமாகக் கூடியுள்ள எமது இளைய தலைமுறையினருக்கும் எமது மக்களுக்கும் தமிழர்களாகிய எமது இன்றை நிலை பற்றி முக்கிய விடங்களைக் கூறுவது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

தமிழர்களாகிய நாம் எமது வாழ்வுக்காக எமது உரிமைக்காகப் போராடி வருகின்றோம்.

எம்மீது கடந்த காலத்தில் புரியப்பட்ட வன்முறைகள், இன அழிப்புக்களுக்கான நீதியை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். எமக்கான உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என நாம் சர்வதேச சமூகத்திடம் கோரி விடுக்கின்றோம்.

இந்த நாட்டு ஆட்சியாளர்கள் தமிழர்களாகிய எங்களுக்குரிய உரிமைகளைத் தருவார்கள் எங்களுக்கான நீதியை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.

அது ஒருபோதும் நடைபெறது என்பதற்கும் எந்த ஆட்சி வந்தாலும் எமக்கான நீதியை வழங்கமாட்டார்கள் என்பதனை தமிழர்களுக்கு நீதி வழங்கவென ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசாரனைக் குழுவின் தலைவர் மக்ஸல் பரணகம கூறுகின்றார்.

தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை வீசியிருந்தாலும் பிழையில்லை என்று. தமிழர்களை அவர்கள் எலிகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் இப்போதும் நோக்குகின்றார்கள்.

அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட போரியல் ஆயுதங்களான கொத்துக்குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் தமிழர்கள் மீது வீசியிருந்தால் அது பரவாயில்லை எனக் கூறும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவிடமிருந்து தமிழர்களாகிய நாம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?

advertisement


ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் நடைபெற்றிருந்த இடமெல்லாம் அவர்கள் விடுதலைப் புலிகள் மீது எவ்வாறு குற்றத்தைச் சுமத்தலாம் என்பதற்கான தடையங்களைப் பெறுவதிலும் எமது மக்களை ஏமாற்றி மக்களுக்கு ஆடு தரலாம் கோழி தரலாம் என்பதில்தான் முனைப்புக் காட்டினார்களே தவிர எமக்கு நீதி தருவதற்காக அவர்கள் செயற்படவில்லை.

தமிழர்களுக்குரிய உரிமைகளை வழங்கி நீதியை வழங்குவதற்கு இப்பொழுதும் தென்னிலங்கையில் அரசியல்வாதிகள் தயாரில்லை.

நாட்டுக்கு நல்லாட்சி ஒரு ஜனாதிபதியினுடைய மாற்றம் வேண்டும் என்பதற்காக நாம் வாக்களித்தோம்.

ஜனாதிபதி சொல்லுகிறார் சர்வதேச நீதிபதிகளை நாம் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் எங்களுடைய வெந்த புண்ணிலே வேல் பாச்சுவதைப் போல்நாங்கள் தரும் நீதியை தமிழர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று. தமிழர்களுக்கு ஒரு தீர்வு தரக்கூடிய ஒரு அங்குல நகர்வைக்கூட எந்த ஆட்சியிலும் நாம் காணவில்லை.

எமது மக்கள் வாழ்ந்த சொந்த இடங்களுக்குப் போய் வாழக்கூட நாம் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலைகளில்கூட இன்றுவரை மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

உலகத்திலே ஜெனிவாவில் கொண்டு வரக்கூடிய இலங்கை தொடர்பான தீர்மானங்களில் இந்த முறை இலங்கை அரசுக்குச் சில வசனங்கள் கடினமானதாக இருக்கின்றன.

அவர்கள் கொஞ்சம் குழம்பியுள்ளார்கள். சர்வதேசத்தால் எமக்கு ஒரு நல்ல நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் இருக்கிறோம்.

ஜெனிவாவிலே தமிழர்களுக்காக ஒரு தீர்மானம் வருகின்றபொழுது எங்களைத் திசை திருப்புவதிலே அவர்கள் மிகவும் கவனமாகவிருந்து செயற்படுகிறார்கள்.

ஜெனிவாவில் அல்குசைன் தமிழர்கள் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட எத்தனிக்கின்றபொழுத்து வடக்குக்காண பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலா தாண்டிக்குளத்திலா என நாம் ஊடகங்களில் பெரிய விவாதங்ளையே நடத்துகின்றோம்.

இப்பொழுது எமது பிரச்சனை வேறு திசைக்குச் கொண்டு செல்லப்பட்டு திசைமாற்றப்படுகின்றது.

மத்திய அரசுதான் வடமாகாணத்தில் சகலதையும் தீர்மானிக்கின்றது என்றால் தமிழர்களுடைய கைகளிலுள்ள மாகாகணசபையில் என்ன அதிகாரம் உள்ளது. வடமாகாணத்தில் தமிழர்களுடைய ஆட்சியா நடைபெறுகின்றது?

தமிழர்கள் இப்போதும் அச்சுறுத்தல்களுக்கும் அடக்கி ஒடுக்கல்களுக்கும் அடிபணிந்துதான் வாழ்கின்றார்கள். இப்போதும் இராணுவத் தலையீடுகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. இப்போதும் எனது அலுவலகம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

நான் இல்லாத வேளையில் எனது அலுவலகத்துக்குச் சென்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராகிய என்னை எங்கே செல்கிறார் எனது செயற்பாடுகள் என்ன என விசாரிக்கின்றார்கள்.

நாம்கூட சுயமாக மக்களைச் சந்திக்கமுடியாதுள்ளது என்றால் எப்படியான ஆட்சி இப்போதும் காணப்படுகின்றது.

தமிழர்களாகிய நாம் எமக்கு நீதி கிடைக்கும் வரை எமக்கு உரிமை கிடைக்கும் வரை எமது இலக்கு நோக்கிய பயணத்தில் எமக்காக மரணித்த மாவீரர்களின் தியாகங்களையும் கொடைகளையும் மனதிருத்தி உறுதியுடன் செயற்பட வேண்டும்என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் , வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவும் , கரைச்சிப் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் நா.வை.குகராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், பாசாலை அதிபர்கள், மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
குண்டுகளை வீசி அழித்தவர்களே அதனை விசாரிக்கும் நீதிபதிகள்:தமிழர்களுக்கு கிடைக்குமா நீதி ? Reviewed by NEWMANNAR on July 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.