தமிழை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது திருக்குறள் - திருக்குறள் மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார்....
தமிழ் மொழி என்ற ஒன்று இருப்பதை உலகத்தினர் அறிந்தது திருக்குறளால்தான். திருக்குறள் வழியாகவே தமிழின் தொன்மையும் தமிழிரின் தத்துவச் சிறப்பும் தமிழரின் ஒழுக்கநெறியும் உலகத்திற்குத் தெரியவந்தது. வீரமாமுனிவர் என அறியப்படும் பெஸ்கி அடிகளார் ஜி. யு. போப் போன்ற மேல்நாட்டுக் கிறிஸ்தவ அறிஞர்கள் தமிழகத்திற்கு வந்தபோது தமிழின் பெருமைய உணர்ந்து திருக்குறளை இலத்தீன் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். அதன் காரணத்தால்தான் உலக அளவில் திருக்குறளின் சிறப்பு தெரியவந்தது என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த யூலை மாதம் 1அம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டின் மாலை அமர்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனரும் மன்னார் கலையருவி நிறுவனத்தின் இயக்குனருமான தமிழ் நேசன் அடிகளார் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:
திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட ஒரு நூலாக இருந்தாலும் ‘தமிழ்’ என்ற மொழியின் பெயர் அதில் எங்குமே இல்லை. ‘தமிழர்’ என்ற இனத்தின் பெயரும் அதில் இல்லை. ‘தமிழ்நாடு’ என்ற நாட்டின் பெயரும் அதில் இல்லை. எந்த ஒரு சமயத்தின் பெயரோ அல்லது கடவுளின் பெயரோ அதில் இல்லை. ஆக ஒரு மொழிக்கோ ஓர் இனத்திற்கோ ஒரு நாட்டிற்கோ ஒரு சமயத்திற்கோ உரிய நூலாக இல்லாமல் உலகம் அனைத்திற்குமாக எழுதப்பட்ட ‘உலகப் பொது நூல்’ திருக்குறள். அதனால்தான் அது உலகப் பொதுமறை என்று போற்றப்படுகின்றது.
மனித குலத்திற்கே பெருவிளக்காக எழுந்து வழிகாட்டும் ஒப்பற்ற நூல் திருக்குறள். ஒழுக்கவியல் மற்றும் நன்னெறிக்கோட்பாடு பற்றி எழுந்த பெரும் உலக இலக்கியங்களில் ஒன்றாக திருக்குறள் விளங்குகிறது. “மானிட வர்க்கத்தின் மாபெரும் தத்துவப்பேழை” என்று அது உலகோரால் போற்றப்படுகின்றது. “வெள்ளித்தட்டில் வைத்த தங்கக் கனி” என்று திருக்குறள் மேல்நாட்டவரால் ஏற்றப்படுகின்றது.
திருக்குறள் தமிழில் எழுந்த ஓர் ஒப்பற்ற நூல். தமிழரின் அறிவுத் திறத்தை இந்த உலகத்திற்குப் பறைசாற்றிய ஓர் அரிய நூல்! உலக அரங்கில் தமிழின் பெருமையை உயர்த்திக்காட்டும் மிகச்சிறந்த நூல்.
திருக்குறள் இந்திய மொழிகளிலும்ää உலக மொழிகளிலும் ஏறத்தாள 100 மொழிகளுக்குமேல் மொழியாக்கப்பெற்று இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆங்கிலத்தில் மட்டும் 40 இற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் உள்ளன. இவை உலக அளவில் திருக்குறளின் பெருமையை உணர்த்துகின்றன.
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏனைய மொழி இலக்கியங்கள் - குறிப்பாக இலத்தீன்ää கிரேக்கம்ää எபிரேயம்ää சமஸ்கிருதம் போன்ற மொழி இலக்கியங்கள் - சமயச் சார்பு இலக்கியங்களாக அரசர்களையும் தேவர்களையும்
கடவுளரையும் புகழந்து எழுதப்பட்ட இலக்கியங்களாக இருந்தன. ஆனால் இதே காலப்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட - திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் என்ற இலக்கியம் மனிதருக்காக எழுதப்பட்ட இலக்கியம்.
மனிதரை முழுநிலையில் உருவாக்க எழுதப்பெற்ற நூல். மனிதருக்காக உலக மொழிகளில் எழுதப்பெற்ற முதல் நூல் இது ஒன்றுதான். ஏனைய மொழி அறநூல்கள் அனைத்தும் சமயம் சார்ந்தவை.
மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி அது எவ்வாறு வாழவேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பெற்ற நூல் திருக்குறள். இதுபோன்ற ஒரு நூல்; உலகில் எந்த மொழிகளிலும் இதுவரை தோன்றியது இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டாலும் அது இன்றும் உலக மக்களுக்கு பொருத்தமான வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றது.
இம்மாநாட்டின் மாலை அமர்வுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராசா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் வேல்நம்பி அவர்களும் இவ்விழாவில் சிறப்புரையாற்றினார்.
தமிழை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது திருக்குறள் - திருக்குறள் மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார்....
Reviewed by Author
on
July 05, 2016
Rating:
No comments:
Post a Comment