அண்மைய செய்திகள்

recent
-

அவலம் தீராத ஈழம்!- ஐ.நா.வும் சர்வதேசமும் தமிழர்களை ஏமாற்றி விட்டன!- சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், கடந்த வாரம் தமிழகம் சென்றிருந்தார்.

அவர் தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி வருமாறு:-

தமிழீழத்தில் போர்நிறுத்தம் செய்யப்பட்டு 7 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழர்களின் வாழ்வியல் நிலை எப்படி இருக்கிறது?

போர் முடிவுக்கு வந்தபிறகும் இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் பாரிய அளவில் இருப்பதால் அச்சத்துடன் மக்கள் வாழ வேண்டிய சூழல்தான் இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் 10 லட்சம் தமிழர்களைச் சுற்றி 1லட்சத்து 50 ஆயிரம் இராணுவம் சூழ்ந்துள்ளது.

அதாவது, 6 சிவிலியனுக்கு ஒரு இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளது இலங்கைஅரசு. இந்த இராணுவத்தினர் ஏறத்தாழ 67ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துள்ளனர். இதில் தமிழர்களின் நிலம் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர்.

இதனால், யாழ்குடாநாட்டில் 32 முகாம்களிலுள்ள தமிழர்கள் தங்களின் பூர்வீக நிலத்தில் குடியேற முடியாத அவலம் நீடிக்கிறது. தவிர, சிங்கள குடியேற்றமும் பாரியளவில் நடப்பதால் தமிழர் பிரதேசத்தில் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்கும் இலங்கை அரசின் சதி அரங்கேறி வருகிறது. போர் முடிந்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை.

வடக்கிலிருந்து இராணுவம் படிப்படியாக குறைக்கப்படும் என்று புதிய ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன பதவியேற்ற போது உறுதி தந்திருந்தாரே?

புலிகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் இராணுவம் அங்கு தேவை என்றும் சொல்லி இராணுவத்தை திரும்ப பெற மறுக்கிறது அரசு.

சிங்கள குடியேற்றத்தை பாதுகாக்கவே இராணுவ கட்டமைப்பை தமிழர் பகுதிகளில் பலப்படுத்துகின்றனர். விவசாயம் மற்றும் பல்வேறு வகையிலான வர்த்தகங்களிலும் இராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இனச்சிக்கலுக்கான தீர்வு திட்டத்தை முன்வைப்பதில் மைத்ரிபால சிறிசேன அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

மகிந்த ராஜபக்சவின் அணுகுமுறைக்கும் மைத்ரியின் அணுகுமுறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழர்களுக்கான அதிகாரம் வழங்கக்கூடிய சின்ன தீர்வு திட்டத்தைக் கூட மைத்ரி அரசு முன்னெடுக்கவில்லை.

சமஷ்டி அரசியல் அமைப்பு, தமிழர்களின் உரிமைகள் பாதுகாப்பு, வட-கிழக்கு இணைப்பு உள்பட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துகள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒரு தீர்வு திட்டத்தை அரசிடம் கையளிக்கப்பட்டது

இவைகளை அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஒற்றை ஆட்சி முறையைத் தாண்டி சிந்திக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ஜனாதிபதி மைத்ரிபாலாவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும்.

மகிந்த அரசாங்கத்துக்கும் மைத்ரிபால அரசாங்கத்துக்கும் என்ன வேறுபாடு?

சீன சார்பு ஜனாதிபதியாக இருந்தார். சீன முதலீடுகளை இலங்கைக்குள் 100 சதவீதம் நிலைநிறுத்த அனுமதித்தார். கொழும்பு துறைமுக நகரத்தை சீன அரசால் கட்டமைக்கப்பட்டு அதில் 25 சதவீத ஹெக்டேர் பரப்பளவு பகுதிகளை சீனாவிற்கே சொந்தமானதாக தாரைவார்த்தார் மகிந்த ராஜபக்சே.

இலங்கையின் மொத்த ஆதிக்கமும் சீனாவின் பிடிக்குள் போவதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டார்கள்.

தமிழர்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் மைத்ரிபால தலைமையில் புதிய ஆட்சி உருவானது. ஆனால், தமிழர்களுக்கு எந்த நலனும் கிடைக்க வில்லை.

சீனாவின் செல்லப்பிள்ளையாக இருந்தார் மகிந்த. மைத்ரியோ இந்தியா -அமெரிக்காவுக்கு செல்லப்பிள்ளையாக இருக்கிறார். ஆனால், தமிழர்களுக்கான உரிமைகளை நசுக்குவதில் இருவரும் ஒருவரே.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்திய தீர்மானத்தில் எத்தகைய முன்னேற்றத்தை மைத்ரி அரசு கொண்டிருக்கிறது?

யுத்த குற்றங்கள் மனித தத்துவத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதி, அதற்கு காரணமானவர்களை தண்டிக்கும் விதத்தில் இலங்கைக்குள் உள்ளக விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும்.

இதற்கு பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் நீதிபதிகள் மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண் டும், நிலங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும், தமிழர்களுக்கு எதிராக நடந்த செயல்கள் மீண்டும் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் வலியுறுத்தியது.

இதுகுறித்து சிறிதும் அலட்டிக் கொள்ளாத இலங்கை அரசாங் கம், சர்வதேச சட்டத்தரணிகளை ஏற்கவே முடியாது என்று நிராகரித்ததுடன் எவ்வித விசா ரணையையும் நடத்த முன் வரவில்லை. மேலும் தீர்மானத்தில் வலியுறுத்தியவைகள் குறித்து எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை.

இந்தச் சூழலில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மட்டத்திலான மீள்பார்வை கூட்டம் 29-ந் தேதி நடக்கவிருக்கிறது. அதில், இந்த தீர்மானத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேள்விகள் எழ உள்ளன. அப்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் சார்பில் கால அவகாசம் கேட்கும் ஒரு திட்டத்தை வைக்கப்படவிருப்பதாக அறிகிறோம். சர்வதேச சமூகத்திடமுள்ள இலங்கையின் யுத்த குற்ற சிந்தனைகளை மறக்கடிக்கவும் மழுங்கடிக்கவுமே இப்படிப் பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது இலங்கை அரசு.

போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை ஈழத்தமிழர் களிடம் இருக்கிறதா?

சர்வதேச அரசியலை மையப்படுத்தி இலங்கையின் மீது மென்மையான அணுகு முறைகளையே கொண்டிருக் கின்றன சர்வதேச நாடுகள். அதனால், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பார்வை முழுமையாக மாறவேண்டும்.

தீர்மானத்தை அங்கீகரித்த இந்தியா, அமெரிக்கா உள் ளிட்ட 24 நாடுகள், மனித உரிமைகளில் அக்கறை கொண்ட நாடுகள் அனைத்தும் -இனப்படுகொலையை அரங்கேற்றிய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டு மென்பதில் சமரசம் கொள் ளாமல் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முன் வரவேண்டும். அப்படிப்பட்ட நிலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கமாட்டோம் என திட்டவட்டமாக இலங்கை அரசு சொல்லிவிட்டது. இதற்கு, தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் எவ்வித கருத் தையும் சொல்லவில்லை.

உலக முழுவதுமுள்ள தமிழர்களுக்கு இது ஏமாற்றம்தான். அதனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தமிழர்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. ஐ.நா.வும் சர்வதேசமும் தமிழர்களை ஏமாற்றி விட்டன.

நக்கீரன் 
அவலம் தீராத ஈழம்!- ஐ.நா.வும் சர்வதேசமும் தமிழர்களை ஏமாற்றி விட்டன!- சுரேஷ் பிரேமச்சந்திரன் Reviewed by NEWMANNAR on July 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.