அண்மைய செய்திகள்

recent
-

சிங்கப்பூரில் 'தமிழ் மொழி விழா'....


சிங்கப்பூர் என்றாலே அதன் நவீனமும், பிரமிப்பான தோற்றமுமே ஒருவர் மனதில் எழும்.  குதூகலத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் இங்கு குறைவு  இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால், அந்த நவீனத்திற்கு இடையிலும், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் ஒர் உயரிய இடம் உண்டு என்பதை எத்தனைப் பேர் அறிவர்?  அதுவும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவியுடனும், ஊக்கத்துடனும்!

தமிழர்கள் இன்று உலகெங்கிலும் வாழ்கின்றனர். ஆனால் சில நாடுகளில்தான் தமிழர்கள், தமிழோடும், தமிழ் கலாச்சாரத்துடனும் வாழ்கின்றனர். அப்படி குறிப்பிட்டுச் சொல்லும் படியான நாடுகளில், சிங்கப்பூரும் ஒன்று. 

அதற்கு முக்கிய காரணம், சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில், தமிழும் ஒன்று என்பதுதான்.

சிங்கப்பூரில் ஒருவர் தம் பண்பாடு மறவாமல் வாழ்வதற்கு, தம் தாய் மொழியின் தொன்மையை அறிந்திருப்பது இன்றியமையாதது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 1819-ம் ஆண்டு முதல் சிங்கப்பூர்/மலாயா பகுதிகளில், தமிழர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு கூறுகிறது. அன்று தொட்டு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்கள் தங்கள் பங்கை ஆற்றிவருகிறார்கள்; சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் பல பரிமாணங்களில் வளர்ந்து கொண்டு வருகிறது.

2000 ம் ஆண்டு,  தகவல் கலைகள் அமைச்சகத்தின் கீழ், 'வளர் தமிழ் இயக்கம்' எனும் ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தமிழை மேலும் வளர்க்கவும், தமிழை மக்களிடத்தில் வாழ்வியல் சார்ந்த மொழியாக ஆக்கும் நோக்கிலும், குறிப்பாக இளைஞர்கள் அரசாங்கத்துடனும், சமூக அமைப்புகளுடனும், தங்கள் உறவை வலுப்படுத்தவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில், இவ்வமைப்பின் ஆதரவோடு, ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் தமிழ் மொழி விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘தமிழில் பேசுவோம், தமிழை நேசிப்போம்’ என்ற முழக்க வரியைக் கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விழாவை, இந்த முறை சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரன்,  ஏப்ரல் 2 ம் தேதி  அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 

ஏப்ரல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த 42 சுவையான நிகழ்ச்சிகள், அனைத்து வயதினருக்கும், தரப்பினருக்கும் வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில்,  40 இணை ஏற்பாட்டாளர்களால் நடத்தப்படுகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 'நீயா நானா?' நிகழ்ச்சியை  நடத்தும் கோபிநாத், பிரபல பத்திரிக்கையாளர் மாலன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் போன்றோர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

'லிக்ஷா' பெண்கள் பிரிவு நடத்திய 'தமிழர் உணவும், பாரம்பர்யமும்' என்ற நிகழ்ச்சியில், வாழை இலையில் உணவு பரிமாறுவது  போன்ற மறைந்து வரும் தமிழ் பாரம்பர்ய கூறுகள் எடுத்துக் கூறப்பட்டது.

பள்ளி மாணவர்கள் தங்களின் விவாதிக்கும் திறனை மெருகூட்ட,  'சொற்களம்' எனும் நிகழ்ச்சி வழி வகுக்கிறது.

மாணவர்களைக் கதை சொல்ல ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், கலையார்வத்தைத் தூண்டக் கூடிய நிகழ்ச்சிகள், சிந்திக்கவைக்கும் சொற்பொழிவுகள், மூத்த எழுத்தாளர்களுடனான இலக்கிய கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள்,  ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்  என 'இயல், இசை, நாடகம்' என முத்தமிழுக்கும், சிங்கப்பூர் ஒரு மாத காலம் விழா எடுத்து, பத்தாவது ஆண்டாக  'தமிழ் மொழி விழாவைக்' கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 

தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்றார் போன்ற நிகழ்ச்சிகளாக, 'மின்னியல் தமிழ் - புத்தாக்க உத்திகளும் எதார்த்த விளைவுகளும்', தமிழ் இணையக் கருத்தரங்கம், 'சிங்கப்பூர் தமிழ் இணையத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்கள் - ஒர் ஆய்வு' போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

மேலும் 'தமிழ் மொழி விழா' மக்களிடம் சென்ற அடைந்து வெற்றிக் கண்டிருப்பதற்கு ஒரு உதாரணமாக, நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்னர் பங்கு பெற்ற மாணவர்கள், தமிழ் மீது ஆர்வம் கொண்டு, இவ்வருடம் நிகழ்ச்சி படைப்பாளர்களாக உருவானதுதான்!

சிங்கப்பூரில் 'தமிழ் மொழி விழா'.... Reviewed by Author on July 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.