அண்மைய செய்திகள்

recent
-

முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி,,,,


30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார்.

இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய் பரவல் பற்றி, பயம் கலந்த ஒரு விழிப்புணர்வு அலை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.

அந்த சமயம், தமிழ்நாட்டில் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 6 செக்ஸ் தொழிலாளர்களின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருந்தது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதை பரிசோதித்தவர் நிர்மலா செல்லப்பா என்ற மருத்துவக் கல்லூரி மாணவிதான்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் (Micro Biology) அறிவியலாளர் மாணவியாக இருந்த அவருடைய இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் முதல்முறை. அது இந்தியாவிலும் எய்ட்ஸ் பரவியிருப்பதை உறுதிசெய்திருந்ததால் இந்தியா முழுவதுமாக பரபரப்புடன் பரவியது.

1985 ம் ஆண்டின் இறுதியில், நிர்மலா ஆராய்ச்சிக்கான தலைப்பு தேடும்போது, அவருடைய பேராசிரியரும் வழிகாட்டியுமான டாக்டர் சுனிதி சாலமன் ஹெச்.ஐ.வி. வைரஸ் பற்றிய தலைப்பிலே ஆராய்ச்சி மேற்கொள்வது புதிய முயற்சி, ஒரு சவாலாகவும் எதிர்காலத்தில் புகழாகவும் இருக்கும் என்று நிர்மலாவை வலியுறுத்தினார்.

ஆனாலும், அப்போது 32 வயதுடையவராக இருந்த நிர்மலா ஹெச்.ஐ.வி. ஆராய்ச்சியில் முழுதாக மூழ்குவதற்கு தயக்கம் காட்டினார்.

ரத்த மாதிரிக்கு சிரமம்

நிர்மலா ஹெச்.ஐ.வி. ஆராய்ச்சிக்கு சென்னையில் பெரிதும் சிரமப்பட்டார். அதற்குமுன் அதைப்பற்றி அறிந்திராமல் இருந்தது ஒருகாரணம்.

மேலும் கொல்கத்தா, மும்பை, டெல்லி, புனே போன்ற நகரங்களில் செக்ஸ் தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளன. சென்னையில் அப்படி இல்லை.

ஆனாலும், சென்ரல் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பெண்களை தேடிபிடித்தார். ஒருவரை வைத்து இன்னொருவரை அணுகியும் அவர்கள் வீட்டுக்குச் சென்று அதுசார்ந்த விழிப்புணர்வை சொல்லியும் ரத்த மாதிரிகளை பெற்றார்.

சில ஆப்பிரிக்க மாணவர்களிடமுமாக 200 ரத்த மாதிரிகளை அரிய முயற்சியில் சேகரித்தார். அந்த முயற்சிக்கு அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தி உதவியும் ஒத்துழைப்பும் கொடுத்தார்.

ஆய்வுமையம் இல்லை

ரத்தமாதிரிகளை பாதுகாக்க போதுமான இடமில்லாமல் அவருடைய வீட்டு ரிஃப்ரிஜிரேட்டரில் வைத்தார். கையுறை உட்பட எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சிரமப்பட்டார். சாலமன் சிறிய ஆய்வகத்தையும் அவருக்கு உருவாக்கிக் கொடுத்தார்.

ரத்த மாதிரிகள் கிடைத்தாலும் அதை சோதனை செய்ய சென்னையில் வழியில்லை. அதனால் வேலூரில் உள்ள கிறஸ்டின் மருத்துவ கல்லூரியில் சாலமன் எற்பாடு செய்து கொடுத்தார். ஆனாலும், அது சென்னையிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருந்தது.

எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் வைரஸை கண்டுபிடிக்க உரிய ரசாயனங்களை சேர்த்து அதை மூடிவைத்து திறந்தபோது 6 பேருடைய ரத்தத்தில் மட்டும் மஞ்சள் நிறமாக மாறியது அது ஹெச் ஐ.வி. பாஸிட்டிவ் வைரஸ் இருப்பதற்கான அறிகுறி.

இந்த செய்தியை அவர் முதன்முதலில் அவருடைய வழிகாட்டியான சாலமனிடம் கூறினார். பிறகு, அதை உறுதிப்படுத்த அந்த 6 ரத்த மாதிரிகளும் அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்டன. அங்கும் அது உறுதி செய்யப்பட்டன.

அதன்பிறகே ஒருவருடைய ரத்தத்தில் ஏய்ட்ஸ் கிருமி இருப்பதை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இந்தியாவில் உருவானது. அது நிர்மலாவின் முயற்சியில் நடந்தது.

அமெரிக்காவில் ஆரம்பம்

எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய முறையான கண்காணிப்பு 1982 ல் அமெரிக்காவில் தொடங்கியது. அப்போது அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயாளிகள் கணிசமான அளவு கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்காவில் வந்திருக்கும் அந்த நோய் இந்தியாவிற்கும் பரவலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சில ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தினாலும் அதற்கு மாறாக, ஊடகங்களூம் சில சமூக ஆர்வலர்களும் இந்தியாவிற்கு அந்த நோய் பரவாது. காரணம் கட்டுப்பாடற்ற செக்ஸ், ஓரினச்சேர்க்கை போன்ற ஒழுக்கக்கேடான கலாச்சாரம் உள்ள மேற்கு நாடுகளுக்குதான் அது பொருந்தும் என யதார்த்தம் புரியாமல் பேசினர்.

ஒருவனுக்கு ஒருத்திதான் இந்திய கலாச்சாரம் என்றாலும் எல்லோருக்கும் எப்படி பொருந்தும் அதுவும் நோயைப் பற்றிய அராய்ச்சியின் தொடக்கத்திலே அது உருவாகும் மற்றும் பரவும் விதத்தை முழுதாக அறிய முடியாது.

இந்தியா ஹெச்.ஐ.வி.க்கான ஆராய்ச்சியை உதாசினப்படுத்தினால், ஒருவேளை, அந்த நோய் பரவினால் குணப்படுத்த அமெரிக்கர்கள்தான் வரவேண்டும் என்றும் சிலரால் எச்சரிக்கப்பட்டது.

ஹெச்.ஐ.வி. பற்றிய ஆராய்ச்சி இந்தியாவில் தாமதித்தாலும் அந்த நோய் இந்தியாவுக்கு வர தாமதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதுபோலவே மும்பை, புனே, போன்று வரைமுறையற்ற நகரங்களில் வாழும் பலருடைய ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்யப்பட்டதில் எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆச்சரியமடைந்தனர்.

பழங்காலத்தில் குடிமகன்களிலும் அரசர்களிலும் பல மனைவிகளுடன் வாழ்ந்தவர்கள் குறைவான வயதில் உடல் மெலிந்து வினோதமான பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது வரலாறுகளில் தெரிகிறது.

ஆகவே, எய்ட்ஸ் என்ற பெயர் புதியதானாலும் அந்த நோய் புதியதா என்பது கேள்விக்குறிதான்!





தொகுப்பு-வை-கஜேந்திரன் -
முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி,,,, Reviewed by Author on September 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.