அண்மைய செய்திகள்

recent
-

‘மாவீரத்தை’ நவம்பர் 27ல் கௌரவப்படுத்துவோம்! 6.05க்கு விளக்கேற்றுங்கள்!!😟 வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு.

இராணுவ தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க சக்திகளின் சகல வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி, தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பிரதேசங்கள் மீது நடத்திய நில ஆக்கிரமிப்புப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது.
போர் அறம் வழுவி சிறீலங்கா அரசால் நடத்தப்பட்ட இந்த மாபெரும் தமிழ் இன அழிப்பு போருக்குப் பின்னரும் கூட, இலங்கைத்தீவில் ‘தமிழ் மக்கள்’ என்று சொல்லப்படுகின்ற ‘தமிழ் தேசிய இனம்’ உயிர்ப்பிழைத்திருக்கிறது என்றால்,

இந்த அருமை பெருமைகள் எல்லாம், புல் பூண்டு செடி கொடி மரம் காடு கரம்பை கல் கட்டடம் விலங்குகள் மனிதர்கள் என்று எதிரே இருக்கும் எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு வரும் ‘மடை திறந்த வெள்ளத்தைப் போல’, நிலப்பசி எடுத்து புறப்பட்டு வந்த சிறீலங்காவின் நில ஆக்கிரமிப்பு படைகளை, தமிழர் தாயகத்தின் எல்லைகளில் நெஞ்சுரத்தோடும் – நேர்மைத்திறனோடும் எதிர்த்து நின்று மண்ணுறங்கும் மாவீரர்களையே சேரும். மாவீரர்களின் உயிர்க்கொடையே இன்றுள்ள தமிழ் தேசிய இனத்தின் உயிர் வாழ்வு ஆகும்!

பௌத்த பேரினவாத சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்துக்கிடக்கும் சிறீலங்கா நாட்டுக்குள்,

தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக்கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக – மீட்பர்களாக – மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக்கப்பட்ட ‘தமிழீழ நடைமுறை நிர்வாக அரசை’ நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் ஒரே ஏகப்பிரதிநிதிகளாவர்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், தரகர்கள் அல்ல. அவர்கள் போராளிகள்! அன்றே இந்திய மனோநிலையை பிரதிபலிக்காமல், தமிழ் மக்களின் மனோநிலையை பிரதிபலித்தவர்கள். யார் எம்மை நிர்ப்பந்திப்பினும் வல்வளைப்பு செய்யினும், ‘பணிந்தும் – குனிந்தும் கொடாமல், சேவகம் செய்து கெடாமல், நம்மால் முடிந்ததை செய்கின்றோம். முடியவில்லை என்கிறபோது செத்து மடிகின்றோம்’ என்று தாம் வரித்துக்கொண்ட உயரிய கொள்கைக்காகவே வாழ்ந்தவர்கள். வீழ்ந்தவர்கள்.

தமிழர் தேசத்தின் அசைவியக்கமாகிய இந்த மாபெரும் தூய விடுதலை இயக்கத்தின் கொள்கை வழி நின்று, உண்மை வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் – அரசியலுரிமைக்காகவும் ஆயுதமொழி பேசி, தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்து, தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்: நவம்பர் 27.

ஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம், மலைபோன்ற மக்கள் சக்தியால் மானசீகமாக பொத்திப்பொத்தி பெருநெருப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அதன் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் வரலாற்றின் அத்தியாயங்களை அசைத்துப்பார்த்தே கடந்து வந்திருக்கிறது. இத்தகைய சர்வவல்லமை பொருந்திய மக்கள் போராட்டத்திலே, பல ஆயிரம் அக்னிக்குஞ்சுகளை நாங்கள் பிரசவித்திருக்கின்றோம். இனமானப்போருக்கு உவந்தளித்திருக்கின்றோம்.

ஈழதேசத்திலே ‘மக்களுக்காக மக்கள்’ நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தின்பால் உள்ளீர்க்கப்பட்டு, ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகியர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துவோமாக!

நவம்பர் 27 அன்று வழமை போன்றே இம்முறையும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரத்தில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு மாலை 6.05 க்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும்.

‘தமிழ் தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம்.
கூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழிச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6.05க்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கி கிடக்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…

மக்கள் நலப்பணியில்,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்
தொடர்புகளுக்கு:

தலைவர், கோ.ராஜ்குமார் 0094 77 854 7440

செயலாளர், தி.நவராஜ்

ஊடகப்பேச்சாளர், அ.ஈழம் சேகுவேரா 0094 77 6699 093 (Viber)
‘மாவீரத்தை’ நவம்பர் 27ல் கௌரவப்படுத்துவோம்! 6.05க்கு விளக்கேற்றுங்கள்!!😟 வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு Reviewed by NEWMANNAR on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.