மட்டக்களப்பில் ஒருவருடத்திற்குள் 4485 வீடுகள் நிர்மாணிப்பு....
2015- 2016ஆம் ஆண்டுகளில் 4485 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் 1070 பேரும், மாற்றுத் திறனாளிகள் 73 பேரும், காணாமல் போனோர் 45 பேரும், முன்னாள் போராளிகள் 294 பேரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் .பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று(08) நடைபெற்ற இவ்வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மீள்குடியேற்ற அமைச்சினால் 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விசேட தேவையுடையோர், காணாமல் போனவர்களது குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியவர்களுக்கு 820 மில்லியன் ரூபா செலவில் 1025 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 2880 வீடுகள் முன்னாள் போராளிகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள், இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் அடங்கலாக 1584 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மீள்குடியேற்ற அமைச்சினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளின் 48 உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்காக 177.87 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை 236 குடிநீர் விநியோகத் திட்டங்களுக்காக 103 மில்லியனும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் 760 திருத்துவதற்காக 145.20 மில்லியன், ரூபா, 1000 மலசலகூட வசதிகளுக்காக 55 மில்லியன் ரூபா, அத்துடன் 1033 வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு பெரும்பாலான வேலை நிறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய வேலைகளை உடனடியாக நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு அரசாங்க அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேலும் 580 வீடுகள் மீள்குடியேற்றப் பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மொத்தமாக 2015- 2016ம் ஆண்டுகளில் 4485 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இதில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் 1070 பேரும், மாற்றுத் திறனாளிகள் 73பேரும், காணாமல் போனோர் 45 பேரும், முன்னாள் போராளிகள் 294 பேரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பில் ஒருவருடத்திற்குள் 4485 வீடுகள் நிர்மாணிப்பு....
Reviewed by Author
on
November 10, 2016
Rating:

No comments:
Post a Comment