குரங்கைக் கொடுமைபடுத்தி கொன்று எரித்த மருத்துவ மாணவர்கள்..! வேலூர் அதிர்ச்சி
வேலூரில் குரங்கு ஒன்றை பிடித்து, அதை அடித்து துன்புறுத்தி கொன்ற மருத்துவ மாணவர்கள், அதை எரித்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையின் உயரமான கட்டடம் ஒன்றில் இருந்து நாய்க்குட்டி ஒன்றை கீழே விட்டெறிந்து, நாய் படும் துன்பத்தை ரசிக்கும் மருத்துவ மாணவர்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் மருத்துவ மாணவர்கள். இப்போது நாய்க்கு பதில் குரங்கு. சென்னைக்கு பதில் வேலூர். ஆனால் அதே மருத்துவ மாணவர்கள்.
வேலூர் கிறிஸ்டியன் கல்லூரி விடுதி வளாகத்தில் புகுந்த குரங்கை பிடித்து அதனை அடித்து துன்புறுத்தி, கொன்று எரித்து விட்டதாக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மீது புகார் கூறப்பட்டு, எப்.ஐ.ஆரும் போடப்பட்டது. மாணவர்கள் நால்வரை சஸ்பென்ட் செய்ய முடிவு செய்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புகார் தெரிவித்த விலங்கின ஆர்வலர்களிடம் பேசினோம். "வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் விடுதி அருகே பெண் குரங்கு ஒன்று கடந்த 19ம் தேதி அலைந்து திரிந்து கொண்டிருந்தது. இதை மருத்துவ மாணவர்கள் 4 பேர், விடுதியில் இருந்த பெட்சீட் ஒன்றில் பிடித்து குரங்கின் கை, கால்களை கட்டி டார்ச்சர் செய்துள்ளனர். சக மாணவர்கள் முன்னால் குரங்கை அடித்து துன்புறுத்திய மாணவர்கள் 4 பேர், தங்களிடம் இருந்த குச்சி, பெல்ட் ஆகியவற்றால் குரங்கை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கு மேல் குரங்கின் ஆசன வாயில் கம்பை விட்டு துன்புறுத்தி கொன்றுள்ளனர். அதன் பிறகு எரித்து உடலை மாணவர் விடுதி மெஸ்ஸின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளனர்," என்றார்.
சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கொடூர சம்பவம் வெளியே தெரியவர, மாணவர்களில் சிலர் விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விலங்கின் ஆர்வலர்கள் ஏலும் பாக்யம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், குரங்கின் உடல் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய 4 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாயை மாடியில் இருந்து தூக்கி எரிந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், குரங்கை அடித்து கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் பாவித்து பணியாற்ற வேண்டிய மருத்துவர்கள், விலங்குகள் படும் துன்பத்தை ரசிக்கும் செயல் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கைக் கொடுமைபடுத்தி கொன்று எரித்த மருத்துவ மாணவர்கள்..! வேலூர் அதிர்ச்சி
Reviewed by NEWMANNAR
on
November 23, 2016
Rating:

No comments:
Post a Comment