போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க முயலும் இலங்கை அரசு!– அமெரிக்க நிபுணர்....
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும், தூதுவராகப் பணியாற்றியவர் ஸ்டீபன் ஜே ராப்.
ஹேக்கில் நடைபெறும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கான அரசதரப்புகளின் அவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இவர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வழக்குத்தொடுனர் பணியகத்தை இன்னமும் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைச் செய்யாமல் உடனடியாக, விசாரணை பொறிமுறை நீதிமன்றத்தை அமைக்க முடியாது.
இந்த விசாரணைகளுக்காக அரசாங்கம் விசாரணை அலகுகளையும், வழக்குத்தொடுனர் பணியகத்தையும் உருவாக்க முடியும்.அப்போது தான் போர்க்குற்ற வழக்குகள் இருந்தால், அதனை உடனடியாக ஆரம்பிக்க முடியும்.
இல்லாவிடின், உடனடியாக நீதிமன்றப் பணிகளை ஆரம்பிக்க முடியாது.
நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதை தள்ளிப் போடுவது, அதனை முற்றிலுமாக தவிர்க்கின்ற ஒரு முயற்சியாக இருக்கக் கூடும்.
காணாமற்போனோர் பணியக சட்டத்தின் மூலம், இலங்கை அரசாங்கம், சில தடைகளை அகற்றியுள்ளது முக்கியமானது.உண்மையைக் கண்டறிதலில் தான் நீதிச் செயல்முறைகள் ஆரம்பிக்கும்.
குற்றவியல் நீதி உண்மையை கண்டறியும் செயல்முறைகளில் தான் ஊற்றெடுக்க ஆரம்பிக்கிறது.உண்மையைக் கண்டறிதலில் இருந்து நீதியை வழங்குவது வரை இலங்கைக்கு இது முக்கியம்.
அமெரிக்காவில் அமையப் போகும் ட்ரம்பின் ஆட்சி, உலகளாவிய நீதி தொடர்பான வேறு விதமான பார்வையைக் கொண்டதாக இருக்கலாம்.
ஆனாலும், வாசிங்டனில் உள்ள அதிகாரிகளும் இராஜதந்திரிகளும்,இலங்ன்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- Puthinappalakai-
போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க முயலும் இலங்கை அரசு!– அமெரிக்க நிபுணர்....
Reviewed by Author
on
November 24, 2016
Rating:

No comments:
Post a Comment