உண்மைகள் சொல்லப்படுகின்றன நிலைநாட்டுவது யார்?
நல்லிணக்கப் போரில் வெற்றி கிட்டவில்லை. சமாதானத்திலும் இதே நிலை என்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
இவ்வாறு குறிப்பிடும் சந்திரிகா அம்மையார் பெருமளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனைப் பங்காளிகள் என்கிறார்.
தவிர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டதே ஆவா குழு என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் என்று பலரும் உண்மை உரைக்கின்ற வேளை நலன்புரி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தாக உள்ளது.
அட, இதுதான் ஒருபக்கம் என்றால் எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அவர்களோ வடக்கின் முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பலம் என்று வெளியில் சொல்லிக் கொள்கிறார்.
ஆக, ஒவ்வொரு வரும் உண்மையைச் சொல்லுகின்றனர். ஆனால் அந்த உண்மைகள் தொடர்பில் வகை சொல்வதற்கு யாருளர் என்பதே இன்றைய கேள்வி.
நல்லிணக்கப் போரில் வெற்றி கிட்டவில்லை என்று கூறும் சந்திரிகா குமாரதுங்க தற்போதைய நல்லாட்சி மலர்வதில் பெரும்பங்கைக் கொண்டிருந்தவர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சந்திரிகாவைப் பகைக்காமல் அவருக்கு உரிய இடம்கொடுத்திருப்பாராயின் மகிந்த ராஜபக்சவே இன்றும் ஜனாதிபதியாக இருந்திருப்பார்.
கெடுகாலம் அவர் சந்திரிகாவை இம்மியும் மதிக்கவில்லை. மாறாக அவரை எந்தளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தினார்.
இதன்காரணமாக மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு கட்டிய சந்திரிகா அம்மையார் அதனை நிறைவேற்றியும் காட்டினார்.
ஒரு பலமான ஆட்சியையே அகற்றியவரால் இன நல்லிணக்கத்தையோ அன்றி சமாதானத்தையோ அல் லது இனப்பிரச்சினைக்கான தீர்வையோ எட்ட முடியவில்லை.
எனினும் அந்த உண்மையை மட்டும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அந்த உண்மையின் வெளிப்பாட்டில் அப்படியானால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது.
இதேபோன்று ஆவா குழுவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே ஆரம்பித்தார் எனில் அவர் அதிகாரத்தில்இல்லாத காலத்திலும் அது இயங்குகிறது என்றால் இப்போது இருக்கின்ற அரச கட்டமைப்பு என்ன செய்கிறது என்று கேட்பதில் தவறில்லை.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்தவர்களில் ராஜித சேனாரத்ன முதன்மையானவர்.
மகிந்த ராஜபக்சவைத் தூக்கி எறிந்துவிட்டு மைத்திரியின் பிரசார மேடையில் துணிச்சலோடு ஏறியவர் அவர். இப்போதும் அவர் அமைச்சர்.
அப்படியானால் அவரால் ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடல்களைச் செய்ய முடியாது போனது ஏன்? என்று வினா எழுப்புவதில் தவறேதும் இல்லையல்லவா?
இப்படியே உண்மைகளைக் கூறுவதுடன் தமது பணி முடிந்து விடுகிறது என்று நினைக்கின்றவர்களின் வரிசையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தரும் இடம்பிடித்துள்ளனர்.
நலன்புரி முகாம்களில் தமிழ் மக்கள் படும் அவலத்தை தென் பகுதி அரசியல்வாதிகள் வந்து பார்க்க வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி மைத்திரி, அதனால் பார்த்த கணப்பொழுதிலேயே அவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமரும் அனுமதியை தனது அதிகாரத்தின் கீழ் வழங்க வேண்டாமோ!
செய்ய வேண்டிய அவரே அதைச் செய்யாமல் உண்மையை உரைப்பதால் என்ன? பயன்.
ஓ! முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பலம் என்று பகிரங்கமாகக் கூறும் சம்பந்தர் ஐயா இதனைத் தன் பக்கத்தில் இருக்கக்கூடியவருக்கு காதோடு காதாக சொல்லி வைத்தால் எவ்வளவோ சுகத்தை தமிழ் இனம் அனுபவித்திருக்கும்.
ஆக, செயலின்றி உண்மையை உரைத்து தம்மை உத்தமர்களாகக் காட்டும் எண்ணிக்கையினர் அதிகரித்திருப்பதை மட்டுமே இங்கு நாம் குறிப்பிட முடியும்.
உண்மைகள் சொல்லப்படுகின்றன நிலைநாட்டுவது யார்?
Reviewed by Author
on
November 09, 2016
Rating:

No comments:
Post a Comment