ஜெனிவா பிரேரணையை அமுலாக்க இலங்கைக்கு மேலும் இரு வருட அவகாசம்!
ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த பல்வேறுபட்ட கருத்துக்கள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று நடந்த சந்திப்பின் போதே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா பிரதிநிதிகளால் இவ்விடயம் உறுதி செய்யப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தும்லை மார்க் மற்றும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மக்கோலே ஆகியோருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான கலந்து ரையாடல் ஒன்று நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நாவின் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படப் போகும் பிரேரணை மற்றும் அதன் சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டன.
இதில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையை முழுமையாக இலங்கை அரசு அமுலாக்குவதற்கு ஒரு வருட கால அவகாசம் ஏற்கெனவே வழங்கப்பட்டு அந்த அவகாசம் முடிவடைந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அரசு மேற்படி பிரேரணையை இன்னமும் முழுமையாக அமுல்படுத்தாத போதிலும் ஏற்கத்தகு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது என கருத்துரைத்த ஐரோப்பிய மற்றும் ஐ.நா பிரதிநிதிகள் இதற்காக இலங்கை அரசுக்கு மேலும் இருவருட கால அவகாசத்தை நீடிப்புச் செய்வதில் என்ன இடர்பாடுகள் ஏற்படும் என வடக்கு முதல்வரிடம் வினவியுள்ளனர்.
இதற்கு, கால அவகாசத்தினை கொடுக்கும் போது இவ்வளவு காலமும் எடுத்த நடவடிக்கைகள் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதென ஆராய்ந்து பார்க்க வேண்டுமென குறிப்பிட்ட வடக்கு முதல்வர், வாராந்தம் மற்றும் மாதாந்தம் என்ன செய்கின்றார்கள் என்பதனை ஐ.நா. அறியக்கூடியவாறு ஏதாவது ஒரு செயற்றிட்டத்தினை வகுக்குமாறு கூறமுடியுமா என மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கால அவகாசம் வழங்குவதில் தமக்கு எவ்வித உடன்பாடு இல்லையென தெரிவித்த வடக்கு முதல்வர், குறுகிய காலமும் அதிகளவான மேற்பார்வையுமே முக்கியமானதென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதாக இருந்தால், ஐ.நாவின் நேரடி கண் காணிப்பிலேயே வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்பு தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா பிரேரணையை அமுலாக்க இலங்கைக்கு மேலும் இரு வருட அவகாசம்!
Reviewed by Author
on
February 17, 2017
Rating:

No comments:
Post a Comment