நோயாளிகளை அச்சுறுத்தும் தனியார் மருத்துவமனைகள்!
தனியார் மருத்துவமனைகள் அறவிடும் கட்டணங்களை ஒழுங்குபடுத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆய்வுகூட பரிசோதனைகளுக்கான கட்டணத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்களுக்கு – –– நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் முக்கியமானதொரு விடயம் குறித்து அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதை இது வெளிப்படுத்தி நிற்கின்றது.
மருத்துவம் என்பது சேவை என்ற நிலையிலிருந்து எப்போதோ வர்த்தகமாகிவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை அது தற்போது பெரும் பணம் உழைக்கும் வியாபாரமாகியுள்ளது.
மூலைக்கு மூலை மருத்துவமனைகளும் ஆய்வுகூடங்களும் முளைப்பதைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது.
அரச மருத்துவமனைகள் எப்போதோ மக்களிடமிருந்து விலகிவிட்டன. அதற்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்படவேண்டியவை.
அதேவேளை, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை மேலும் நோயாளிகளாக்கும் விதத்தில் மனஉளைச்சல்களை அளிக்கக்கூடியவையாக மாறியுள்ளன.
சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதுபோல நீதியற்ற விதத்தில் கட்டணங்கள் அறவிடப்படுவது தனியார் மருத்துவமனைகளில் வழமையாகியுள்ளது. அவர்களின் சேவைக்காக அறவிடவேண்டிய கட்டணத்தை விட பலமடங்கு அதிகமாக அறவிடுவது இயல்பாகக் காணப்படுகின்றது.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் பொறுப்புக்கூறும் தன்மை என்பது முற்றிலும் காணப்படுவதில்லை. கட்டண விடயங்களிலும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் பதில் கூறவேண்டும் என்ற எண்ணம் தனியார் மருத்துவமனைகளுக்கு இருப்பதைக் காணமுடிவதில்லை.
தனியார் மருத்துவமனைகள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் மிக நீளமானவை.ஆனால், இவற்றை ஒழுங்குபடுத்துவது, ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது யார் என்பதே முக்கியமான கேள்வி.
ஏனெனில், பெருமளவு தனியார் மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் பெரும் செல்வந்தர்களாக – அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.
இவர்களை ப் பகைத்துக்கொண்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான துணிச்சலற்றதாக அரசு காணப்படுகின்றது. இது இலங்கையில் மாத்திரம் காணப்படுகின்ற நிலையுமல்ல. உலக நாடுகள் பலவற்றிலும் அவலம் இது.
தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவதற்கான மக்கள் சேவையை நோக்கி ஆகக் குறைந்தளவுக்கு மாற்றுவதற்கான துணிச்சலற்ற அரசியல்வாதிகள் காரணமாக மக்கள் மேல் மேலும் பல சுமைகள் சுமத்தப்படுகின்றன.
கூட்டு அரசு கடந்த இரண்டு வருடத்துக்கு மேற்பட்ட காலப்பகுதியில் இது குறித்த வாக்குறுதிகளை அளித்துள்ளபோதிலும் இதனை நோக்கிய காத்திரமான நடவடிக்கைகளை நோக்கி இன்னமும் முன்னேறவில்லை.
அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பும் வெறும்பேச்சாகவே போய்விடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வலம்புரி
நோயாளிகளை அச்சுறுத்தும் தனியார் மருத்துவமனைகள்!
Reviewed by NEWMANNAR
on
June 20, 2017
Rating:

No comments:
Post a Comment