மாணவி துஸ்பிரயோகம்! இந்த தீர்ப்பு அதிபர், ஆசிரியர்களுக்கு பாடமாக அமையட்டும்: நீதிபதி இளஞ்செழியன் -
குறித்த தீர்ப்பை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று வழங்கியுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்.தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 2009 ஆம் ஆண்டு 9 வயது மாணவி ஒருவர் பாடசாலை அதிபரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த மாணவியின் பெற்றோரால் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்றின் உத்தரவில் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டை முன்வைத்து சந்தேகநபருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் வழக்கு தீர்ப்புக்காக இன்று திகதியிடப்பட்டது.
“சிறுமியால் கூறப்பட்ட சாட்சியத்தையும் மருத்துவ அறிக்கையையும் வைத்து இந்த மன்று எதிரியைக் குற்றவாளியாக அறிவிக்கின்றது.
குற்றவாளி பாடசாலை அதிபர். அவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் பாடசாலை உள்ளது. அவரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் தான் மாணவி உள்ளார்.
அரச அலுவலர் ஒருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களையோ சிறுவர்களையோ பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது கடுமையான குற்றமாகும்.
அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவது கட்டாயமானதாகும். ஆகவே, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க வேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும். தவறின் ஒரு மாதகால கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
மேலும், “வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிபர், மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே இந்தக் குற்றவாளிக்கு வழங்கப்படும் தீர்ப்பு அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டினார்.
மாணவி துஸ்பிரயோகம்! இந்த தீர்ப்பு அதிபர், ஆசிரியர்களுக்கு பாடமாக அமையட்டும்: நீதிபதி இளஞ்செழியன் -
Reviewed by Author
on
February 21, 2018
Rating:
Reviewed by Author
on
February 21, 2018
Rating:


No comments:
Post a Comment