அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில்......40வருட கலைச்சேவையாளரும் பதிவாளருமான சீமான் பத்திநாதன் பர்ணாந்து


கலைஞனின் அகம் கணனியில் முகம்  விம்பம் பகுதியில்  நாடக நடிகர் நாவலாசிரியர் கவிஞர் விளையாட்டு என பன்முகப்படைப்பாளியும் முதலமைச்சர் விருதுபெற்றவரும் 40வருட கலைச்சேவையாளரும் பதிவாளருமான சீமான் பத்திநாதன் பர்ணாந்துஅவர்களின் அகத்தில் இருந்து…..

தங்களைப்பற்றி----
மன்னார் மாவட்டத்தின் வங்காலை கிராமத்தின் பிறப்பிடமாகவும் மன்னார் மண்ணே வாழிடமும் ஆகும்  எனது தந்தை திரு.ஆரோக்கியம் சீமான் பர்ணாந்து தாயார் சுவக்கீன் சந்தாள் மிராண்டா பிள்ளைகள் உறவுகளுடனும் கலையுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றேன்.

கல்விக்காலம் பற்றி----
எனது ஆரம்பக்கல்வியை 1-11வரை மன்.புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயத்திலும் பின் உயர்தரக்கல்வியினை மன்.எருக்கலம்பிட்டி மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றுக்கொண்டேன் பின் கடல்தொழிலும் தற்போது விவாக பிறப்பு-இறப்பு பதிவாளராக நானாட்டான் வங்காலைப்பிரிவில் கடமையாற்றுகின்றேன்.

கலைத்துறை பிரவேசம்பற்றி---
நான் சிறுவயதில் இருந்தே கலையார்வம் உடையவன் நான் கலை மன்றங்களில் இணைந்து நாடகம் நடித்து வந்தேன் 1966ம் ஆண்டு நீரோவின் கொடுமை –வங்காலை கலை கலாச்சாரமன்றம் முதல் நடிகராக நடித்துள்ளேன். 1966-2017இன்று வரை கலையோடு வாழ்கின்றேன்.


 நாவல் கவிதை எழுதுவதற்கான உத்வேகம் பற்றி----
சிலவருடங்களுக்கு முன்பு நான் பாரிஸவாத நோயினால் பாதிப்புற்று 3-4வருடங்கள் படுத்த படுக்கையாக கிடந்தேன் எனது மகள் ஒருத்தி மருத்துவதாதியாக இருக்கின்றாள் அவளின் பெருமுயற்சியாலும் மற்ற பிள்ளைகளிதும் மனைவியினதும் ஆதரவாலும் இறைவனின் அணுக்கிரகத்தினாலும் குணமடைந்து விட்டேன.அந்த நேரத்தில் தான் எனது பிள்ளைகள் சும்மா இருக்கும் நேரத்தில் முன்பு எழுதியது போல நாடகங்கள் நாட்டுக்குத்துக்கள் எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள் நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் எழுதிப்பிரியோசனம் இல்லை நாட்டுக்கூத்து எடுத்துப்பட்ட துன்பங்களை  ஒரு கதையாக எழுதுவம் என்று நினைத்து எழுதினேன் அதுவே குறுநாவலான கூத்து படிச்ச கதை அமைந்தது அதனைத்தொடர்ந்து பாடம் என்ற கவிதையும் எழுதினேன் அத்தோடு எழுத்தும் வாசிப்பின் மீதும் நாட்டம் அதிகமாகி சில நாவல்களும் ஆய்வும் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.

கவிதை நாவல் ஆய்வு எனப்பயணிக்கும் நீங்கள் சிறுகதை எழுதவில்லையா….
வங்காலையின் பணிபுரிந்த அருட்தந்தை பஸ்ரியன் அடிகளாரின் வாழ்வைப்பற்றிய கதையெழதினே.அத்தோடு சில சிறுகதைகளும் எழதினேன் ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை உங்களின் வேண்டுகோளுக்கிணங்க மிகவிரைவில் சிறுகதை தொகுப்பு ஒன்றினையும் வெளியிடுவேன்.

கவிதை நாவல் இவைஇரண்டில் எது எழுதுவது மிகவும் கஸ்ரமாக உள்ளதாக உணருகின்றீர்கள்.
கவிதைதான் ஏன் என்றால் பெரிய விடையங்களை நான்கு எட்டு அல்லது 16 வரிகளில் சொல்ல வேண்டும். அதற்கு பொருத்தமான சொற்களை தேடியும் நன்கு வாசித்தும் புதிய சொற்களை புரியும்படி எழுத வேண்டும்.
நாவலில் இந்தச்சிக்கல் இல்லை கதைக்களம் கதாப்பாத்திரம் போன்றவற்றின் ஊடேபயணிக்கலாம் என்னைப்பொறுத்தவரையில் குறைந்தது 45 நாட்களில் ஒரு நாவலை எழுதிவிடுவேன் இலகுவானது.

தங்களின் தமிழாற்றலுக்கு காரணமானவர் என்றால்----
 எனது தமிழாசான் தமிழ் வித்துவான் ரகுமான்(மக்கள் காதர் அவர்களின் அண்ணன்) சொல்வேன் இவர்தான் மன்னார் மாவட்டத்தின் முதலாவது தமிழ்வித்துவான் தனது வீட்டை விற்று இந்தியா சென்று தமிழ்வித்துவான் படித்துப்பட்டம் பெற்றவர். எனக்கு மட்டுமல்ல எனது மகளுகக்கும் தமிழ் படிப்பித்துள்ளார் அவரை கௌரவப்படுத்தும் பொருட்டு எனது அடுத்த நூலினை அவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன் அவரது சகோதரன் கலைவாதி கலீல் அவர்களிடம் ஆசியுரையும் பெறவுள்ளேன் எனது கடமையில் இதுவும் ஒன்று.

ஆய்வுகள் மேற்கொள்வதாக சொன்னீர்கள் அதுபற்றி---
ஆம் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன் அது எமது கடற்தொழில் சார்ந்தும் சாதிப்பாகுபாடு தொடர்பானதொன்றும் நாயக்கரும் தமிழும் என்ற தலைப்பிலும் இன்னும் சில ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கின்றேன் முடிந்த பின்பு சொல்கின்றேன். வெள்ளைக்காரர்கள் தமிழும் தமிழர்களின் வாழ்க்கையினையும் ஆங்கிலத்தில் அதிகமாக எழுதியுள்ளார்கள்.

நாவல் எழுதுகின்றவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி---
தகுதிகள் என்பதைவிட எந்தப்பகுதியின் கதைக்களம் அமைகின்றதோ அந்தப்பகுதி சார்ந்து முழுமையான அறிவும் தெளிவும் பெற்றிருக்கவேண்டும்.அத்தோடு அப்பிரதேசத்திற்குரிய பிரதேசவழக்கு சொற்கள் பழக்கவழக்கநடைமுறைகள் கட்டாயம் இருக்கவேண்டும். கற்பனை வளம் ஓரளவவாது இருக்கவேண்டும் சிலசம்பவங்கள் எழுதும்போது பிரச்சினைகள் வரும் என்றால் அவற்றினை தவிர்த்தல் மிகவும் நல்லது.

தங்கள் அனுபவத்தில் இருந்து இளைஞர்களுக்கான கருத்து….
தற்போது இளம் கலைஞர்கள் அதிகமாக கவிதை தான் எழுதகின்றார்கள் நல்லவிடையம் தான் அதிலும் புதுமையாகவும் சிறப்பானவையாகவும் எழுத வேண்டும். முடிந்தளவுக்கு நவீனமயப்படத்தலாம் அதனால் தமிழுக்கு சிறப்பு ஏற்படும் பழை மரபிலே நிற்கவேண்டிய அவசியம் இல்லை ஆனால் திமிழ்மொழி சிறப்புக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

உங்கள் வழ்வின் சந்தோஷமான விடையம் என்றால்----
2017ம் ஆண்டுக்கான முதலமைச்சர் விருதினை 2018-03-25 பெறும் போது நான் முழுமையாக மகிழ்சியடைந்தேன். வடமாகாணத்தினால் அங்கீகாரம் பெற்றது மகிழ்ச்சிதானே ஊரில் விருதுகள் பெற்றிருந்தாலும் இவ்விருது எனக்கு மகிழ்சிக்குரியதுதான்.

தங்களுக்கு கவலையான விடையம் என்றால்---
எனக்கு கவலையான விடையம் என்றால் தற்போது வாசகர்கள் குறைவு தற்போது வெளிவரும் நல்ல பெறுமதியான நூல்களையாவது வாசித்து பயன்பெறலாம் தானே  நூல்கள் அதிகமானவை  வெளிவருகின்றது. வெறும் விருதுகள் நிலைப்பதில்லை ஆனால் அவரவர் புத்தகங்கள் பேசவேண்டும் அந்தளவுக்கு வாசகர்களும் வேண்டும்.

நாட்டுக்கூத்து நாடகங்கள் தற்போது மருவிவருகின்றது அவைபற்றி----
முன்னைய காலகட்டங்களில் நவீனம் இல்லை அதனாலும் மக்கள் அதிகமான ஆர்வம் கொண்டிருந்ததினால் நாட்டுக்கூத்து நாடகங்கள் சிறப்பாய் இருந்தது. தற்போது அவ்வாறில்லை காரணம் நவீனத்தின் வளர்ச்சி கலைஞர்கள் நடிகர்களுக்கு நேரமின்மை வேலை அதிகம் அதனால் பழகவோ நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றவோ யாரும் முன்வரவில்லை அத்தோடு கலாச்சரப்போட்டிகள் பிரதேசமட்டம் மாவட்டமட்டம் நடத்தினார்கள் தற்போது அவ்வாறில்லை வெறுமனே கலைகலாச்சார நேரங்களில் 01-15நிமிடங்களில் நாடகங்களை போடுவதால் பயன் ஏதும் இல்லை இருக்கின்ற கலைமன்றங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் கலையும் வளரும் கலைஞர்களும் வளருவார்கள்..

தங்களது படைப்புக்கள் பற்றி----
  • “பாடம்” கவிதைதொகுப்பு-2016
  • “கூத்து படிச்ச கதை”-நாவல் 2016
  • “தோற்றுப்போனவர்கள்” நாவல் 2017
வெளியிட தயாராக இருக்கும் நூல்கள் பற்றி---
  • “கூறியது கூறல்”-குறுநாவல்
  • “1964-டிசம்பர்-24” நாவல்
  • “திசை தெரியாப்பயணங்கள் “ நாவல்
தங்களால் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் பற்றி----
  • காலதேவன் கட்டளை-வரலாற்று நாடகம் ஜோண்டீ சில்வா கொழும்பு-1977
  • வேட்டை-வரலாற்று நாடகம் லும்பினி மண்டபம்-கொழும்பு-1978
  • மரணத்தின் பாதை-சமய நாடகம் தேசிய வானொலி வன்னி சேவை-1993
  • பொக்கிஷம்-வரலாற்று நாடகம் தேசிய பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டது.
  • செஞ்சோற்றுக்கடன்-நாட்டுக்கூத்து திருகோணமலை-1998
  • முப்பதுவெள்ளிகள்-சமயநாடகம் வங்காலை-1982
  • வெடிகுண்டு சமூகநாடகம் தேசிய இளைஞர்சேவைகள் மன்றவிழா-1983
  • சவுலும் பவுலும்-நாட்டுக்கூத்து 1976-1977
  • மனக்கோலம் சமூகநாடகம் வங்காலை 1978-1979
  • தரித்திரக்குழந்தை -சமூகநாடகம் வங்காலை 1978
  • மறைந்த விண்மீன் -நாட்டுக்கூத்து வங்காலை-1998
  • “விடுதலை” சமய நாடகம் வங்காலை 1980
  • “குருதியில் நனைந்த கோயில்” சமயநாடகம் வங்காலை-1976
  • “மண்ணின் மைந்தர்கள்”சமூகநாடகம் மேடையேற்றப்படவில்லை

  • திருப்பாடுகளின் காட்சி  இறைநாடகம் வங்காலையின் உதவிப்பங்குத்தந்தையாக தமிழ்நேசன் அடிகளார் இருந்தபோது அவரே நெறியாள்கை செய்த 6மணித்தியால நாடகம்.
  •  
பெற்றுக்கொண்ட விருதுகள் பட்டங்கள் பற்றி----
  • செழுங்கலைவித்தகர்-பிரதேச கலாச்சாரப்பேரவை-நானாட்டான்
  • மன் கலைச்சுரபி-மாவட்ட கலாச்சார விழா-மன்னார்
  • பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப்போட்டி நாட்டுக்கூத்து “செஞ்சோற்றுக்கடன்”
  • முதலமைச்சர் விருது-25-03-2018 (சில மறந்துவிட்டேன்.)
மன்னாரில் கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதில்லையே அத பற்றி…
உண்மைதான் ஒரு சிலரே எல்லா அமைப்புகளிலும் நிர்வாகம் செய்கின்றார்கள் புதிதாக  யாரையும் தெரிவுசெய்வதில்லை அதனாலும் பலர் விரும்பி கலைப்பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாமையினாலும் கலைஞர்கள் கௌரவிக்கப்படாமை காரணமாக அமைவதோடு சாதியம் மதம் பிரதேசவாதம் என்பனவும் செல்வாக்கு செலுத்துகின்றது. நான் எனது நூல்வெளியீட்டில் வைத்து 10 கலைஞர்களுக்கு கௌரவிப்பு செய்துள்ளேன். சிலர் மறைந்த கலைஞர்களுக்கு அவரது மனைவி பிள்ளைகள் சார்பாகவும் கொடுத்துள்ளேன் இருக்கும் போதே கௌரவிப்பது சாலச்சிறந்தது என்பது எனது கருத்து.

 மன்னார் மாவட்டத்தில் கலைவிழாக்கள் பற்றி---
தற்போது மிகவும்  நல்ல முறையில் நடைபெறுகின்றது. பாராட்டுக்குரியது இருப்பினும் வருடத்தில் ஒருமுறை நடைபெறுகின்ற கலாச்சாரவிழாக்கள் மாவட்டத்தில் இருந்து குறைந்தது இரு கலைஞர்களின் நூலினையாவது வெளிக்கொண்டு வரலாம் ஒரு ஆவணமாகவும் இருக்கும் ஊக்குவிப்பாகவும் இருக்கும் அல்லவா வெறுமனே ஒருநாள் நிகழ்வாக இராமல் இப்படியான தரமானபடைப்புக்களை வெளிக்கொண்டுவராலாம் என்பத எனத கருத்து.

மன்னார் மாவட்டத்தில் கலைஞர்கள் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் நியூமன்னார் இணையம் பற்றி----
மிகவும் பாராட்டப்படவேண்டிய விடையம் நிறையபழைய மூத்த கலைஞர்களை நாம் மறந்துவிட்டோம் தற்போது அவர்களைபற்றி யாருக்கும் தெரியாது அவர்களை மீண்டும் வெளியுலகிற்கு கொண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரிய செயல்பாடாகும் தொடரட்டும் உங்கள் சேவை இறைவணைப்பிராத்திக்கின்றேன்.

சந்திப்பு-வை.கஜேந்திரன்













கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில்......40வருட கலைச்சேவையாளரும் பதிவாளருமான சீமான் பத்திநாதன் பர்ணாந்து Reviewed by Author on April 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.