சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தின் 700 வருட வரலாற்றை மாற்றியமைத்த ஈழத்தமிழர்
பேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில் 700 ஆண்டுகளுக்குப் பின் முதற்தடவையாக பிற இனத்தவர், பிற சமயத்தவர் இந்த கல்வியினை பெற்றுள்ளது வரலாற்று நிகழ்வாகப் பதியப்பட்டுள்ளது.
சைவசமயத்தின் பால் சைவநெறிகூடத்தின் பெயரில் தர்மலிங்கம் சசிக்குமார் இந்த வெளிவாரி பட்டய கல்விக்கான தேர்வில் பல்சமய இல்லத்தின் உதவியுடன் தோற்றியிருந்தார்.
ஈராண்டு செயற்பாட்டு கோட்பாட்டு கல்விக்கு பின்னர் இவர் தேர்விற்கு தோற்றியிருந்தார். சமயபோதனையில் நீண்டகால அனுபவம் உள்ள 14 நிபுணர்கள் இந்த கல்வியினை மேற்கோண்டு நிறைவுத் தேர்வில் 10 சமயபோதகர்கள் தேர்வில் சித்தியடைந்திருந்தனர்.
ஈழத்தமிழ் சைவ அருட்சுனையரான தர்மலிங்கம் சசிக்குமாரும் சித்தி அடைந்து நேற்று பேர்ன் பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில், சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரசின் நீதி மற்றும் காவற்துறை அமைச்சர் சமறூக்கா முன்னிலையில் பேராசிரியர் ஈசாபெல் நோற்ரோவிடமிருந்து பட்டயத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நடுவன் அரச அமைச்சர் தனது உரையில், இங்கு கல்வியினைப் பயின்று நிறைவில் பட்டயச் சான்று பெற்றிருக்கும் உங்கள் அனைவரது கல்வி அறிவும் சுவிஸ் வாழ் அனைத்து மக்களுக்கும் நிறைவாகக் கிடைக்க வேண்டும். வேற்றுமைகளைக் களைய உங்கள் கல்வி பயன் படவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
இந்த கற்கை நெறியினை வழிநடத்திய ஈசாபெல் பேசுகையில், இதுவரைகாலமும் ஒரு சமயம் மட்டும் கோலோச்சி வந்த சமயநெறியால் ஆற்றுப்படுத்தல் எனும் துறையினை இன்று அனைத்து சமயத்தவர்களும் பெற வழி செய்துள்ளோம்.
இதன் பெறுபேறாக சமயத் தலைவர்கள் சட்டப்படி மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்களுக்கு சென்று தமது கல்வியால் அவர்களை ஆற்றுப்படுத்தலாம்.
ஒரு மனிதரும் தனித்து விடப்பட்ட உணர்விற்குள் கட்டுப்படாமல் இன்னொரு மனிதன் உதவிக்கரம் அளித்து உள்ளத்தை ஆற்றுப்படுத்த வழிசெய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கற்கை நெறி வெற்றியளிக்க உதவிய அனைவருக்கும், சிறந்து கல்வி கற்று சித்தி அடைந்தவர்களுக்கும், இன்று பட்டமளிப்பு நிகழ்விற்கு வருகை அளித்திருக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் குறிப்பாக நடுவன் அரசின் அமைச்சர் சமறூக்காவிற்கும் தமது நன்றிகளை நவின்றுள்ளார்.
கல்வி பெற்றதன் பயன் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும், சிறைச்சாலைகளுக்கும், அகதிகள் முகாம்களுக்கும் ஆற்றுப்படுத்தல் பணிக்காக உள்நுழைய ஒப்புதல் பெற்றுக் கொடுக்கிறது.
மேலும், பன்னாட்டு சபையின் சட்டத்தின் படி தடுப்பு முகாம்களுக்கும் உட்சென்று மக்களை ஆற்றுப்படுத்த இது வழி செய்கிறது.
அதேவேளை, 700 வருட சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தவரான தர்மலிங்கம் சசிக்குமார் இறையியல் ஆற்றுப்படுத்தல் பட்டயக் கல்வியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தின் 700 வருட வரலாற்றை மாற்றியமைத்த ஈழத்தமிழர்
Reviewed by Author
on
May 30, 2018
Rating:

No comments:
Post a Comment