ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்த வங்காளதேசம் -
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதனையடுத்து லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
அந்த அணி 12 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முதல் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். முகமது மிதுன் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் குவித்து அணியை மீட்டனர்.

அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில்,
வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஜூனைத் கான் 4 விக்கெட்டுகளும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

வங்காளதேசம் அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் பாகிஸ்தான் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.
அந்த அணியில் இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 81 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து ஆசிப் அலி 31 ஓட்டங்களிலும், சோயப் மாலிக் 30 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். எஞ்சியவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்று, ஆசிய கிண்ணம் தொடரில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றியது.
வங்காளதேசம் அணி சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்த வங்காளதேசம் -
Reviewed by Author
on
September 27, 2018
Rating:
No comments:
Post a Comment