அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் -


கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன், லெப்ரினன் கேணல் கில்மன் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையாரான கந்தையா வேலாயுதபிள்ளை பிரதான ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம்மையே ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இதில் சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 2008 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர். மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டுவரை தமிழ் மக்கள் தமது உறவுகளான மாவீரர்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தமுடியாத இராணுவ அச்சுறுத்தல்களும் அடாவடிகளும் காணப்பட்டன.

அக்காலப் பகுதிகளிலும் மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் திகதி இராணுவ அச்சுறுத்தலை தாண்டி தமது உறவுகளுக்கு சுடரேற்றி உணர்வோடு நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தி வந்தனர்.
தொடர்ந்து வந்த காலங்களில் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த மகிந்தவின் ஆட்சி அகற்றப்பட்டு இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனையடுத்து இராணுவ அடாவடிகள் ஓரளவுக்கு ஓய்வடைந்தன . தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியிருந்த இராணுவத்தினர் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றனர்.
ஆனாலும், இராணுவ அச்சுறுத்தல்களும் ஒட்டுக்குழுக்களின் அடாவடிகளும் அகலாது தொடர்ந்தன.

இந்நிலையில் தமது உறவுகளை அவர்களுக்குரிய வணக்க இடமான மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளான நவம்பர் 27 அன்றைய தினம் சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த பற்றைக் காடுகளை அகற்றுவதற்காக சு.பசுபதிப்பிள்ளை தலைமையிலான 15 பேர் அடங்கியோர் பல அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தற்துணிவுடன் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். அச்செய்தி அனைவருக்கும் தெரியவர தமது உறவுகளை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் செல்லக் காத்திருந்த மாவீரர்களின் உறவுகள் திரண்டு வந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

இச்செய்தி பரவியதும் தாயகத்திலுள்ள பல பாகங்களிலும் காணப்படும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிரமதானப் பணிகள் இடம்பெற்று இராணுவத்தினரால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் மீண்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியாக மாவீரர்களுக்குச் சுடரேற்றி துயிலுமில்ல மரபுகளின்படி வணக்கம் செலுத்திவருகின்றனர்.
இதேவேளை, தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வுகளிலிருந்து அழிக்க முடியாத நினைவெழுச்சி வணக்க நாளாக தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிறைந்துள்ளது.
தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் - Reviewed by Author on November 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.