தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
இனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
விசாரணைகளின் பின்னர், தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர், பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு முன்னர் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை.
வடக்கில் இருந்த ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்கள் வெளியே அனுப்பப்பட்டு மிக மோசமான யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் ஏறத்தாழ 70,000 பேர் இறந்துள்ளதாக ஐ.நா அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஆரம்பத்தில், ஒருவர் கூட சாகவில்லை என இலங்கை அரசாங்கம் கூறியது. ஆனால், பல்வேறுபட்ட விசாரணைகளின் மூலம் 70,000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். மேலதிக விசாரணைகள் செய்ய வேண்டுமென ஐ.நா நியமித்த 3 பேர் கொண்ட ஆணைக்குழு கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவாக இருக்க வேண்டும். யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்ற விடயங்களை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆகவே, இந்த தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைவரும் ஆணைக்குழு நியமிப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.
இன்றைக்கு பிரதமர் நாங்கள் “மறப்போம்” “மன்னிப்போம்” என்றால், இதுவரையில் நடந்த யுத்தக் குற்றங்கள் நடந்துள்ளனா? நடக்கவில்லையா? என்பது ஆராயப்பட வேண்டும்.
காணாமல் போனோர் பற்றி ஆராயப்பட வேண்டும். இவ்வாறான நேரத்தில், எந்தவித விசாரணைகளும் இன்றி, மறப்போம், மன்னிப்போம் என்பது ஒட்டுமொத்தமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் இனத்திற்கு, அவர்கள் நீதியைக் கோரும் நேரத்தில், அந்த நீதியை முற்று முழுதாக மறுதலித்து, மறப்போம், மன்னிப்போம் என்று கூறுவது, தமிழ் மக்கள் நீங்கள் உங்களுக்கான நியாயத்தைக் கேட்க வேண்டாம். நீதியைக் கேட்க வேண்டாம் என்று கூறுவது தவறானது. விசாரணைகள் முடிந்ததன் பிற்பாடு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பதா? இல்லையா? என்பது பற்றி பின்னர் ஆலோசிக்க முடியும்.
குற்றம் இழைத்தவர்களுக்கு “மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தமிழ் மக்கள் கூறவில்லை”. தமிழ் மக்களுக்கு நடந்தவற்றிற்கு ஒரு நீதி விசாரணை வேண்டும். இந்த விசாரணைக்குப் பிற்பாடு, சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக இருந்தால், அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பது தொடர்பில் தமிழ் மக்கள் ஆராய முடியும்.
ஆனால், எவற்றையும் செய்யாமல், நீங்கள் மறந்துவிடுங்கள் என்று சொல்லுவது எந்தவிதத்தில் நியாயமானது? கடந்த 4 வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொய் பேசி வந்துள்ளீர்களா? பிரதமர் வெறும் சிங்கள மக்களுக்கான பிரதமரா? அல்லது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குமான பிரதமரா?
அபிவிருத்தி என்று பலதைச் செய்கின்றீர்கள், ஆனால், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கடந்த 4 வருடங்களாக என்னத்தைச் செய்துள்ளீர்கள்.
பிரதமர் சொல்வது போன்று மறப்போம், மன்னிப்போம் என்பதெல்லாம், ஒரு ஒழுங்குமுறையான விசாரணைகளின் பின்னர் பார்த்துக்கொள்ள முடியும்.
விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர், தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன் பின்னர், பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் தயாராக இருப்பார்கள்.
எனவே, தமிழ் மக்களுக்கான நீதி விசாரணைகள் எவற்றையும் செய்யாது, மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவது தமிழ் மக்களை நடுத்தெருவில் விடுவதற்கான நடவடிக்கையை செய்ய முனைகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
Reviewed by Author
on
February 19, 2019
Rating:

No comments:
Post a Comment