முல்லைத்தீவில் 13889 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு -
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட வறட்சி காரணமாக இதுவரை மூன்று பிரதேசங்களில் 13,889 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் பதிவாகியுள்ளதுடன், வெலிஓயா, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு பிரதேசங்களில் விபரங்கள் திரட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1967 குடும்பங்களை சேர்ந்த 6296 பேரும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 10,799 குடும்பங்களை சேர்ந்த 33,797 மக்களும், துணுக்காய் பிரதேசத்தில் 1123 குடும்பங்களை சேர்ந்த 6,426 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இடங்களுக்கு பிரதேச சபை ஊடாக குடி தண்ணீரினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 13889 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு -
Reviewed by Author
on
June 19, 2019
Rating:

No comments:
Post a Comment