அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுகள் – 2019
நாடளாவிய ரீதியில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களது ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கோடு ஆக்கதிறன் நிகழ்வுகள் ஐந்தாவது வருடமாக நடாத்தப்படவுள்ளது.
மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானது என்னும் நோக்கில், மனிதனைப் புத்திசாலியாக்கும் உலகக் கல்வியோடு, அவனைப் பூரணத்துவம் உள்ளவனாக்கும் அறநெறிக் கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கி, இளம் இந்துச் சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலரச்செய்து, அவர்களின் ஆளுமையையுந் திறமைகளையும் மலர்ந்து விரிவடைய வைக்குங் கல்வியை வழங்கி, சிறந்த குறிக்கோளையும் இலட்சியத்தையும் அடைய வகைசெய்வதாய் உள்ளவையே அறநெறிப் பாடசாலைகள்.
அறநெறிப் பாடசாலைகளிற் பயிலும் இளஞ்சிறார்களுக்கு இந்து சமய அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஆளுமைத் தன்மையை முழுமையாக வளர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு அவர்களுக்குட் களங்காணாது அரும்பாகிக் கிடக்கும் ஆக்கத்திறன்களை மலரச்செய்யும் வகையில் வருடந்தோறும் முன்னெடுக்கப்படும் தேசிய ஆக்கத்திறன் விருதுக்கான, ஆக்கத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வுப் போட்டிகள் ஐந்தாவது வருடமாக வெகு சிறப்பாகப் புதிய தனி ஆளுமை, ஒருங்கிணைந்த ஆளுமை வெளிக்கொணர்வுப் போட்டிகளையும் உள்ளடக்கியதாய் முன்னெடுக்கப்படவுள்ளது.
அறநெறிப் பாடசாலை ரீதியிலான, பிரதேச ரீதியிலான, மாவட்ட ரீதியிலான, தேசிய ரீதியிலான வகையில் இப்போட்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ் வருடத்திற்கான ஆக்கத்திறன் ஆளுமை வெளிக்கொணர்வுப் போட்டி நிகழ்வுகளாக எழுத்தாற்றல், பேச்சாற்றல், கதாப்பிரசங்கம், சித்திரம் மற்றும் நீதி நூல் ஒப்புவித்தல் (நீதிநூல் மனனம்) முதலான தனி ஆளுமையை வெளிக்கொணரும் போட்டிகளும்; ஒருங்கிணைந்த ஆளுமைகளை வெளிப்படுத்தும் குழுநிலை ஆக்கத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வுகளாக வில்லுப்பாட்டு , பண்ணிசை, பரத நாட்டியம் , நாடகம் மற்றும் சொல்லாடற் திறன் (கருத்தாடற் திறன்) முதலான போட்டிகளும் நடாத்தப்படவுள்ளன.
மாவட்ட நிலையில் முதலிடம் பெற்றவர்கள், தேசிய மட்ட ஆக்கத்திறன் போட்டிக்குத் தெரிவாகி, தேசிய ரீதியில் நடாத்தப்படும் போட்டியில் மிகச்சிறந்த ஆக்கத்திறன் ஆளுமையை வெளிக்காட்டும் அறநெறிப் பாடசாலை மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் “தேசிய ஆக்கத்திறன் விருதுகள்”,பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவர். மேலும் தேசிய ரீதியிலான போட்டிக்கு முகங்கொடுத்து அறுபது வீதத்திற்கும் மேலான புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கும் அவர்களது எதிர்கால நலன்களைக் கருத்திற்கொண்டு தேசிய தரச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டி ஊக்கப்படுத்துவதும் கடந்த வருடந்தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. தேசிய ரீதியிலான பாராட்டு வைபவங்களைத் தொடர்ந்து, இப்போட்டி நிகழ்வுகளிற் பங்குபற்றி தமது ஆளுமைத் திறன்களை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு மாவட்ட ரீதியிலும் பிரதேச ரீதியிலும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
“தேசிய ஆக்கத்திறன் விருது – 2019” இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அறநெறிப் பாடசாலைகளிற்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களை www.hindudept.gov.lk எனும் திணைக்கள இணையத்தளத்திலும்; நேரடியாகத் திணைக்களத்திலும்; மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களிற் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் அறநெறிப் பாடசாலைகளால் 31.07.2019ஆம் திகதிக்கு முன்பாகக் கிடைக்கக் கூடியதாகக் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.
பணிப்பாளர்
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
248 -1/1 காலி வீதி
கொழும்பு – 04.
மேலதிக தகவலிற்கு
தொலை பேசி
(011) 255 2641
(011) 255 4278
தேசிய ஆக்கத்திறனுக்கான சுற்றுநிருபம்
http://www.hindudept.gov.lk/web/images/pdf/araneryawards_circulars.pdf
தேசிய ஆக்கத்திறன் விருதுகளுக்கான விண்ணப்படிவம்
http://www.hindudept.gov.lk/web/images/pdf/application_for_national_craetivity%20award.pdf
பண்ணிசையும் பஜனையும் தொடா்பான சுற்றுநிருபம்.
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுகள் – 2019
Reviewed by Author
on
June 20, 2019
Rating:

No comments:
Post a Comment