தமிழர் தலைநகரில் வரலாற்று பொக்கிஷமாக திகழும் பகுதியை பாதுகாக்க மதங்களை கடந்து ஒன்று கூடிய தமிழர்கள் -
இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டுள்ளதுடன், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று பௌர்ணமி தினம் என்பதால் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் வந்துள்ளனர்.
என்ற போதும் அவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரியவருவதுடன், அவர்களும் அப்பகுதியில் நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கையை ஆண்ட பத்து தலைகளை கொண்ட அரசன் இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி கன்னியாவின் ஏழு இடங்களில் குத்தியதாகவும், அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஐதீகம் உள்ளது.
இவ்வாறான ஐதீகத்தை கொண்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய தினம் போராட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது.
எனினும் போராட்டம் மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழர் பாரம்பரிய மற்றும் வரலாற்று இடமான கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் கோரிக்கையோடு திரண்டுள்ள மக்களுக்கு ஆதரவாக கிறிஸ்தவ மற்றும் இந்து மதகுருமார்களும், அரசியல்வாதிகளும் ஒன்றுகூடியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் மதம் மற்றும் இனவாதம் தலை தூக்கியுள்ள நிலையில் தமிழர்களின் வரலாற்று பிரதேசத்தை காப்பாற்ற இன, மத, பேதங்களை கடந்து தமிழர்கள் என்ற அடிப்படையில் கிறிஸ்தவ மதகுருமார்களும் இணைந்துள்ளமை நாட்டு மக்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள சிறந்ததொரு பாடமாகும்.
தமிழர்களின் விடுதலையை நோக்கிய போராட்ட வரலாற்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ குருமாரின் பங்களிப்பு மிக முக்கிய பங்கு வகித்தது. அவர்களின் ஒற்றுமையே வடக்கு, கிழக்கு தமிழர்களின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒற்றுமையை கூட சிதைக்க சிலர் முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், எனினும் இவர்களின் ஒற்றுமை என்றுமே கலங்கப்படவும் இல்லை, தாமதப்படவும் இல்லை என குறிப்பிடுகின்றனர்.
தமிழர்கள் என்ற ரீதியில் களமிறங்கியுள்ள இவர்களின் ஒற்றுமையால் வடக்கு, கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், பலத்தையும் உலகிற்கு உரத்து சொல்வதற்கான ஒரு தகுந்த காலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தமிழர் தலைநகரில் வரலாற்று பொக்கிஷமாக திகழும் பகுதியை பாதுகாக்க மதங்களை கடந்து ஒன்று கூடிய தமிழர்கள் -
Reviewed by Author
on
July 17, 2019
Rating:

No comments:
Post a Comment