இலங்கை த்ரில் வெற்றி - உலக சாதனையை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்:
உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர்.
இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். இதில் கருணாரத்னே 32(48) ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் கடந்த குசல் பெரேரா 64(51) ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசல் மென்டிஸ் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர்.

இதில் குசல் மென்டிஸ் 39(41) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸ் 26(20) ஓட்டங்களில் போல்ட் ஆக, தொடர்ந்து பொறுப்பாக ஆடி தனது சதத்தினை பதிவு செய்து அசத்திய அவிஷ்கா பெர்னாண்டோ, 103 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்த நிலையில் கேட்ச் ஆனார்.
அடுத்து களமிறங்கிய இசுரு உதனா 3(6) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தனஞ்ஜெயா டி சில்வா 6(3), திரிமன்னே 45(33) கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், பாபியன் ஆலென், காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கிறிஸ் கெயில் மற்றும் சுனில் அம்ரிஷ் ஆகியோர் களமிறங்கினர்.
அதில் சுனில் அம்ரிஷ் 5(6) ஓட்டங்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5(11) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் கெயில் 35(48), ஹெட்மயர் 29(38), ஜேசன் ஹொல்டர் 26(26), பிரித்வெயிட் 8(15) ஓட்டங்களில் வெளியேறினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். நிகோலஸ் பூரனுடன் ஆலன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை கணிசமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ஆலன் 51(32) ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பூரன் 92 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன், காட்ரல் ஜோடி சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.
அந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 118(103) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தாமஸ் 1(6) ஓட்டங்களில் வெளியேறினார்.
கேப்ரியல் 3(7), காட்ரல் 7(10) ஆகிய இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக லசித் மலிங்கா 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ், ரஜிதா மற்றும் வாண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
மேலும், உலகக்கிண்ணம் அரங்கில் அதிக ஓட்டங்களை சேஸ் செய்த அணி என்ற உலகசாதனையை வெறும் 24 ஓட்டங்களில் விண்டீஸ் அணி இழந்தது.



இலங்கை த்ரில் வெற்றி - உலக சாதனையை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்:
Reviewed by Author
on
July 02, 2019
Rating:
No comments:
Post a Comment