தனித்துப் பேச்சுக்கு வரவே மாட்டோம்! ரணிலுக்கு விக்னேஸ்வரன் நேரடி பதில்
தனித்துப் பேச்சுக்கு வரவே மாட்டோம். ஐந்து கட்சிகளின் கூட்டணியாகவே பேச வருவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்புக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் நேரடியாகப் பதில் வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து பேச்சுக்கு வருமாறு இன்று விக்னேஸ்வரனுக்கு அழைப்புக் கிட்டிய போதே அவர் இவ்வாறு நேரடியாகப் பதிலளித்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நான் தனித்துப் பேசவர முடியாது. நாங்கள் ஐந்து கட்சிக் கூட்டணியாகவே இவ்விடயங்கள் குறித்து பேசுவது என முடிவு செய்துள்ளோம். எனவே, ஐந்து தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு நேரத்தில் சந்திக்க அழைப்புக் கிடைத்தால் வருவோம் என்றும் பதிலளித்துள்ளார்.
ஏனைய நான்கு கட்சிகளின் பிரதானிகளான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) ஆகியோருடன் உரையாடி அவர்களுக்கு ஏற்ப ஒழுங்குகளைச் செய்யும்படி விக்னேஸ்வரன் தெரிவித்த பதிலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாளை அல்லது அடுத்த நாள் கொழும்பில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக பிரதமர் ரணில் தரப்பிலிருந்து விக்னேஸ்வரனுக்குப் பதில் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கொழும்பில் தங்கியுள்ள விக்னேஸ்வரன், ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், ஏனைய தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின்னரே - பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கைத் தரப்புகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வரவேற்றாலும் வரவேற்காவிட்டாலும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 13 அம்சங்கள் அடங்கிய தமிழர்களின் கோரிக்கைப் பட்டியல் ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் விக்னேஸ்வரன் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனித்துப் பேச்சுக்கு வரவே மாட்டோம்! ரணிலுக்கு விக்னேஸ்வரன் நேரடி பதில்
Reviewed by Author
on
October 20, 2019
Rating:

No comments:
Post a Comment