அமைச்சர் விஜயகலாவுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு திறந்த நீதிமன்றம் முன் வாக்குமூலம் வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிட்டப்பட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மனு மீதான ஆராய்வின் போது கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அந்த வாக்குமூலத்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், தென்னிலங்கை அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நிறைவு செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் ஆலோசனை கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்தினால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் விஜயகலாவுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு
Reviewed by Author
on
October 19, 2019
Rating:

No comments:
Post a Comment