பிரதமர் ரணிலின் விசேட அறிவித்தல் -அனைவருக்கும் நன்றி..!
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே பிரதமர் ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் எவ்வித அரசியல் தலையீடுகளும், அழுத்தங்களுமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயற்படக்கூடிய சூழலொன்றை நாம் உருவாக்கினோம்.
அதனூடாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும், நேர்மையானதுமான முறையில் நடைபெறுவதற்கும், வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தமது விருப்பத்திற்குரிய வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குமான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து எம்மால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நிலை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கும் அதேவேளை, அத்தகைய சூழலில் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, அது முடிவடையும் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினருக்கும் அமைதியைப் பேணுவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் நன்றி கூறுகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணிலின் விசேட அறிவித்தல் -அனைவருக்கும் நன்றி..!
Reviewed by Author
on
November 19, 2019
Rating:

No comments:
Post a Comment