கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் மாற்றமா? சுமந்திரன்mp விளக்கம் -
“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராகும் எண்ணம் எனக்கு இப்போது இல்லை. அதற்கான சூழ்நிலையும் உருவாக இல்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே. தலைமை மாற்றம் என்பது விசமத்தனமான பிரசாரம்."
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருந்த கூட்டமைப்பின் தலைமை மாற்றம் தொடர்பான செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் மாற்றம் என்றோ அல்லது அதனை நான் எடுக்கப் போவதாகவோ வெளிவந்த செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாதான்.
அவர்தான் இன்றும் தலைவராக இருக்கின்றார். அவர் தலைவர் பொறுப்பில் இருந்து தான் இறங்குவதாகவோ அல்லது அந்தத் தலைமைப் பொறுப்பில் இனி நீடிக்கப் போறதில்லை என்றோ எந்தவிதமான அறிவித்தலும் வரவில்லை.
ஆகையால் இந்தத் தலைமை மாற்றம் என்ற செய்தி வேண்டுமென்றே விசமத்தனமாகப் பரப்பப்படும் ஒரு பிரசாரம். அவ்வாறான தலைமை மாற்றம் மேற்கொள்கின்ற முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை.
எந்தவிதமான மாற்றமும் இப்போதைக்கு நடைபெறப் போவதும் இல்லை. கூட்டமைப்புக்கு ஒரு புதிய தலைவர் வருவதாக இல்லை. அதற்கான சூழ்நிலை உருவாகவும் இல்லை.
அப்படியான நேரத்தில் அதை ஒரு பெரிய பேசு பொருளாக எடுத்து தங்கள் கருத்துக்களைச் சொல்வதெல்லாம் வேண்டுமென்று ஒரு விசமத்தனமாகச் செய்யப்படுகின்ற பிரசாரம்.
கூட்டமைப்புக்குள் ஒரு தலைமைப் பதவி மாற்றம் ஏற்படுவதாக இருந்தால்கூட அது கூட்டமைப்பின் உள் விவகாரம். மற்றக் கட்சிகளுக்கு அதில் எந்தவிதமான ஈடுபாடுகளும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
குறிப்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் யாரும் எந்தக் காலத்திலும் கருத்துச் சொல்வது கிடையாது.
அதேபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கோ அல்லது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கோ தலைவர் யாராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் ஒரு காலமும் சொல்வதில்லை.
ஏனெனில் அது அவர்களுடைய கட்சி விவகாரம். ஆகையால் கூட்டமைப்புக்குள் இல்லாதவர்கள் கூட்டமைப்பின் தலைவராக யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று சொல்வதெல்லாம் வேடிக்கையான விடயங்கள்.
அது அவர்களோடு எந்தவிதத்திலுமே சம்பந்தமில்லாத விடயங்களாகத்தான் இருக்கின்றன” - என்றார்.
கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் மாற்றமா? சுமந்திரன்mp விளக்கம் -
Reviewed by Author
on
January 24, 2020
Rating:

No comments:
Post a Comment