மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவவிற்கு சைவமகாசபையினால் ‘அன்பே சிவம்’ விருது!
அகில இலங்கை சைவ மகா சபையின் ‘அன்பே சிவம்’ விருது வழங்கல் மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விழா தைப்பூச தினமான நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு சபையின் தலைவர் சிவத்திரு நா.சண்முகரத்தினம் தலைமையில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ ‘அன்பே சிவம்’ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். அரச அதிபர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான தொழில்நுட்ப பீடங்களின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, ஆசிரிய கலாசாலை ஓய்வுநிலை விரிவுரையாளர் சி.குணசீலன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கௌரவ விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி சு.ரவிராஜ், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.தேவநேசன், சுதேச மருத்துவ திணைக்கள வடக்கு மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி.சி.துரைரத்தினம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், சின்மயா மிசன் வட மாகாண வதிவிட ஆச்சாரியார் தவத்திரு சீதாகாசானந்தா சுவாமிகள் ஆகியோர் வழங்குவர்.
சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன், மானிடம் அறக்கட்டளை முன்னாள் தலைவர் சிவத்திரு இ.செல்வநாயகம் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றுவர். சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தொடக்கவுரை ஆற்றுவார்.
மேலும், சைவ மகா சபையின் பொருளாளர் அருள்.சிவானந்தன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தாதிய பரிபாலகர் சோ.இராசேந்திரன் ஆகியோர் பாராட்டுரை ஆற்றுவர்.
‘அன்பே சிவம்’ சஞ்சிகையின் முதற்பிரதியை பசுக்கள் இடபங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் தொழிலதிபர் கு.கங்கைவேணியன் பெற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவவிற்கு சைவமகாசபையினால் ‘அன்பே சிவம்’ விருது!
Reviewed by Author
on
February 15, 2020
Rating:

No comments:
Post a Comment