மன்னாரில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக துண்டுப்பிரசுரம்
தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும்,தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் 'மன்னார் பொது நிலையினர் சமூக பொருளாதார அரசியல் பேரவை' எனும் பெயரில் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டு பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த காலத்தில் எமது பிரதேசங்களில் அனைத்து இன மக்களுக்கும் எவ்வித மத பேதங்களும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தது மட்டுமன்றி ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று பட்டு வாழ்ந்த வரலாறு எமக்கு உண்டு.
இருப்பினும் நாம் கடந்த பல தசாப்தங்களாக எமது உரிமைகளுக்காக போராடி வருகின்றோம்.இந்த விடுதலைப் போராட்டத்திற்காக இது வரை காலமும் இன, மத , சாதி , பேதங்கள் இன்றி பல்லாயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து இருக்கின்றோம் என்பதை யாவரும் அறிந்த உண்மை.
அவ்வாறான தியாகங்கள் உயிரிழப்புகளின் ஊடாகவே தமிழர் என்ற இனத்தை உலகறியச் செய்தோமே தவிர எந்த அரசியல் வாதிகளாலும் அல்ல என்பதை சகலரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமானது.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுக்கு இராணுவத்தினரால் பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக பராமரிப்பிற்கும் முன்னேறிச் சென்று இவர்கள் கொல்லப்பட்ட போதும் எந்த குழுக்களும் தொடர்ந்தும் தமது பணியில் இருந்து பின்வாங்கவும் இல்லை. பயப்படவும் இல்லை.
மத, பேதங்களை பார்த்ததும் இல்லை . அவர்கள் ஒரே இலக்கு மக்களைப் பாதுகாப்பது மட்டுமே. எங்கள் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் மக்கள் மீது கொண்ட அதீத பற்றினால் தான் அவர்கள் மீதான துன்பியல் நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் சரி சர்வதேச நாடுகளுடன் சரி எமது மத குருக்களை தவிர வேறு எந்த மத குருக்களும் பேசியதும் கிடையாது உடன் சென்றதும் கிடையாது.
ஆனால் அன்று பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கி அவர்களை துரோகிகள் என்றும், மதவாதிகள் என்றும் சமூக வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் விமர்சித்தது மிக வேதனை அளிக்கின்றது. இவற்றையும் நாம் பொறுமையாகவே பார்த்துக்கொண்டு இருந்தோம் .
ஆனால் தற்பொழுது அது அதிகரித்து கட்சித் தலைவர்களும் அரசியல் வாதிகளும் உண்மை நிலையினை மறைத்து தமது சுயநல அரசியலுக்காக கிறிஸ்தவ மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி விட்டு எம் கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்துவதுடன், எமது மன்னார் மறை சாட்சிகளின் பூமி என்பதே இல்லாது செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை ஒருபோதும் கத்தோலிக்க பொது நிலையினராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது.
நாம் உரிமைக்காகவும் , தேசியத்திற்கும் என்றும் வாக்களிக்க எமது வாக்குகளை பெற்றவர்கள் எம்மையே குற்றவாளிகள் என்று முத்திரை குத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி விட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எமக்காக பேசியதை விட தமது சுயநல அரசியலுக்காக பேரம் பேசியதே அதிகமாக காணப்படுகின்றது.
அரசியல் ரீதியாக பிரித்தாளும் தந்திரத்தை அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் பல்வேறு கட்சிகள் உட்புகுந்து கிராமங்களை மட்டுமல்லாது அங்கு வாழும் மக்களை பரம்பரை ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் கட்சியாக பிடித்து அவர்களின் பாரம்பரியங்கள் பண்பாடுகள் கலாச்சாரங்கள்பிரிக்கப்பட்டு வருவதுடன், அரசியல் பிளவுகள் ஏற்பட்டு ஒற்றுமை இன்மையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அனேகமான கிறிஸ்தவ பாரம்பரியங்களை கொண்ட கிராமங்கள் கூட பல நூறாக பிரிந்து காணப்படுகின்றது.
பிரிவினையை பெரும்பான்மையின அரசியல்வாதிகள் மட்டுமல்லாது எமது தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்து மேலும் மேலும் விளைவுகளை ஏற்படுத்துகின்றனர்.
மக்களின் உணர்வுகளையும் முரண்பாடுகளையும் தீர்த்து வைக்கும் நோக்கில் எந்த ஒரு அரசியல்வாதியும் சிந்திக்கவும் இல்லை செய்யப்படவும் இல்லை.
நடவடிக்கை தொடருமானால் எமது அடிப்படை ஆன்மிக கட்டுமானங்கள் உடைக்கப்பட்டு நாம் நிற்கும் நிலை உருவாகும்.
பொறாமையும், கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லா செயல்களும் நடக்கும் அதுவே இப்பொழுது நடந்தேறி வருகின்றது. எனவே தான் பொது நிலையினரின் நாம் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் ஊடாக எமது மக்களை ஒன்றிணைக்கும் செயல் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.
கட்சிகளினாலும் அரசியல் தலைவர்களும் முன்னெடுக்க முடியாத கிராமங்களையும், கிராம மக்களையும் ஒன்றிணைத்து' என்ற கருப்பொருளில் பொது நிலை ஆகிய நாம் ஒரு குழுவாக ஒன்றிணைந்து எமது ஆன்மீக கடமைகளின் ஊடாக எமது மக்களை அரசியல் கட்சிகளின் பிரிவினைவாத குழிக்குள் இருந்து மீட்டு ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு கட்சி பேதமின்றி அனைத்து பொது நிலையினரையும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
என குறித்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டு பிரசுரத்திற்கு உரிமை கோரி 'மன்னார் பொது நிலையினர் சமூக பொருளாதார அரசியல் பேரவை' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக துண்டுப்பிரசுரம்
Reviewed by Author
on
March 05, 2020
Rating:

No comments:
Post a Comment