அண்மைய செய்திகள்

recent
-

வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும்! சம்பந்தன் வலியுறுத்து -

“போர்க்காலத்தின்போது ஓர் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்தது.
நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்."
இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் உண்மைக்குப் புறம்பாக சிங்கள மக்கள் மத்தியில் அவர்களது இருப்புக்கு ஆபத்து உள்ளது என்ற பிரசாரம் கோட்டாபய தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை அரசின் முடிவானது நாட்டுக்கு நன்மைபயக்காத ஒன்றாகும்.
மனித உரிமைகள் தொடர்பில் தமிழ், சிங்கள பேதமோ - பிரச்சினைகளோ இல்லை. எவரேனும் சர்வதேச மனிதநேய சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியிருப்பின் அத்தகைய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையானது இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் மூன்று முக்கிய உள்ளடக்கங்களைக் கொண்டதாகும்.
இலங்கையில் நிலையான சமாதானத்தை அடைய வேண்டுமெனில் இந்த மூன்று அம்சங்களையும் அடைய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
மேலும், உண்மை நிலைநாட்டப்பட்டு நீதியானது நியாயமான ஒரு நீதிப்பொறிமுறைக்கூடாக அடையப்பட வேண்டும்.


ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அரசின் சார்பில் போரை முன்னெடுத்த அரச படைகள் பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியமானது.
அவர்கள் அப்படி நடந்துகொள்ளாமல் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கு முரணாக செயற்பட்டிருந்தால் தங்களது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புகூறல் அவசியமாகும்.
போர்க்காலத்தின்போது ஓர் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்தது.
நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த விடயங்கள் குறித்து தீர்வைக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை.
பல தசாப்தங்களாக அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. 13ஆவது திருத்தச் சட்டத்துக்குப் பிற்பாடு பல்வேறு வரைபுகள் இது தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

அநேக விடயங்களில் பாரியளவு இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்பு மற்றும் திறன் அபிவிருத்தி ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒரு பூரண அபிவிருத்தித் திட்ட வரைபொன்று சர்வதேச சமூகத்துக்கு முன்வைக்கப்படும்.
அந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும்" - என்றார்.
இதன்போது பதிலளித்த நெதர்லாந்து தூதுவர், "வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு எமது பூரண ஓத்துழைப்பை வழங்குவோம்" என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் நெதர்லாந்து அரசு தொடர்ந்தும் மீளாய்வு செய்து அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தூதுவர் மேலும் கூறினார்.
வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும்! சம்பந்தன் வலியுறுத்து - Reviewed by Author on March 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.