பிரதமரும்,அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்:ஜேவிபி கோரிக்கை -
ஜேவிபியின் நாடளுமன்றக்குழு தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அது திகதியின்றி ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் தேர்தல் திகதியை குறிப்பிடாமல் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்துவதென்றும் இதன்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலப்பகுதிக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜூன் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்றத்தை கூட்ட முடியும் என்ற நகர்வு திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்னஜீவன் எச் ஹூல் தமது ஆட்சேபனையை தெரிவித்த நிலையில் திகதி நிர்ணயித்துக்கான கூட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது ஜூன் 20ம் திகதியன்று தேர்தலை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. எனினும் இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்த்தன.
நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்த பின்னரே தேர்தலை நடத்த முடியும் என்று அந்தக்கட்சிகள் தெரிவித்துவிட்டன.
இதனையடுத்து இயல்பாகவே ஜனாதிபதி கோட்டாபய நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக வெளியிட்ட வர்த்தமானி செயலிழந்துவிட்டதாகவும் எனவே அவர் பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என்றும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளன.
எனினும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்காத கோட்டாபய ராஜபக்ச பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதில்லை என்று கூறிவருகிறார்.
இந்நிலையிலேயே பழைய நாடாளுமன்றத்தை கோட்டாபய கூட்ட முடியாதென்றால் அந்த நாடாளுமன்றத்தின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று ஜேவிபியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரும்,அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்:ஜேவிபி கோரிக்கை -
Reviewed by Author
on
April 27, 2020
Rating:

No comments:
Post a Comment