கண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள்! ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை -
உலகெங்கும், 14 லட்சத்து, 47 ஆயிரத்து, 471 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், மூன்று லட்சத்து, ஒன்பதாயிரத்து, 145 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ், 83 ஆயிரத்து, 401 பேரின் உயிரைப் பறித்துள்ளது.
இதில், ஐரோப்பிய நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் மட்டும், ஏழு லட்சத்து, 50 ஆயிரத்து, 276 பேருக்கு தொற்று உள்ளது.

குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தலா, ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
அதிக பலியில், 17 ஆயிரத்து, 127 பேருடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயினில், 14 ஆயிரத்து, 555 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் உள்ள, அனைத்து மருத்துவமனைகளிலும், தீவிர சிகிச்சை பிரிவுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
நோயாளிகளின் வருகை அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், கடும் மன வேதனையில் இருப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு தொடர்ந்து, மன நல மருத்துவர்கள் மற்றும் சமூக தொண்டு நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
இது குறித்து, மன நல மருத்துவர்கள் கூறுகையில், பகல், இரவு பாராமல், மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றுகின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக அளவில் நோயாளிகளை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். கண்ணுக்கு தெரியாத, வைரஸ் எதிரியை சந்திக்க வேண்டியுள்ளது.
நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன், அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், அது தோல்வியில் முடிந்து, பலர் கொத்துக் கொத்தாக உயிரிழக்கும்போது, அவர்கள் ஊக்கத்தை இழந்து விடுகின்றனர்.

கண் எதிரே ஒரு உயிர் கைவிட்டு போவதை தடுக்க முடியாத ஏக்கம், அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி விடுகிறது. அதுமட்டுமின்றி குடும்பத்தினரையும் சந்திக்க முடியாமல், தனிமையில் இருக்க வேண்டியுள்ளது.
இது, அவர்களின் மன உறுதியை குலைத்து விடுகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் சிலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இதுவும், அவர்களை மன ரீதியில் பாதிக்கும் அம்சமாகும். இத்தாலியில் மட்டும், மருத்துவ துறையைச் சேர்ந்த, 13 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை, 90 மருத்துவர்கள், 29 செவிலியர்கள் இறந்துள்ளனர். அதிக நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் உடல் சோர்வைவிட, இந்த மன சோர்வு அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த வைரஸ் கொடூர பாதிப்பு எப்போது முடியும் என்பது தெரியாதது, அவர்களுடைய மன உறுதியை அசைத்து பார்க்கிறது.
இந்த மன உளைச்சலால், சிலர் தற்கொலை செய்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை, ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கண் முன்னே கொத்து கொத்தாக போகும் உயிர்கள்! ஐரோப்பிய மருத்துவர்களின் பரிதாப நிலை -
Reviewed by Author
on
April 09, 2020
Rating:
No comments:
Post a Comment