ஆஸ்திரேலியாவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து கொரோனா அச்சம்.......
’Black Lives Matter’ என அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, இந்த இயக்கத்திற்கு ஆதரவாகவும் ஆஸ்திரேலிய காவலில் பழங்குடிகள் உயிரிழப்பதற்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன், அடிலெயிட் ஆகிய நகரங்களில் நிறவெறிக்கு எதிரான பேரணி நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இப்போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்பேரணியில் பங்கேற்றவர்கள், இரண்டு வாரக்காலம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலிய துணை தலைமை மருத்துவ அதிகாரி கோட்ஸ்வொர்த், அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
“போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு தெளிவான செய்தி- உங்களுக்கு உடல் நலப்பிரச்னையுடன் சுவாசிப்பதில் ஏதேனும் சிக்கல் என்றால், உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்,” என மருத்துவ அதிகாரி கோட்ஸ்வொர்த் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை கணக்குப்படி, 7,265 பேருக்கு ஆஸ்திரேலியவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6,706 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்றினால் ஆஸ்திரேலியாவில் 102 உயிரிழந்துள்ள போதிலும், மே 23 யிலிருந்து இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.

No comments:
Post a Comment