முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஹிஸ்புல்லா முயற்சி: முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை
இல்லாமல் செய்வதற்காகவே முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஐக்கிய
சமாதானக் கூட்டமைப்பு கட்சியின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடுகின்றார் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான எம்.எஸ்.சுபைர்
தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியின் ஏறாவூர் பிரதேச மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும்
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது, ஒரு வரலாற்று
முக்கியத்துவமிக்க தேர்தலாக பார்க்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில்
ஒவ்வொரு சமூகமும் தங்களது பிரதிநிதித்துவங்களை பாதுகாத்துக்கொள்ளும்
பொருட்டு சிந்தித்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில்
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவும் குறித்த தேர்தலில் போட்டியிடுகின்றார்.
முன்னாள்
ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு அவர் சார்ந்த கட்சிகள், இம்முறை அக்கட்சிகளினூடாக
தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அதனால் அவர் ஐக்கிய
சமாதானக் கூட்டமைப்பு கட்சியில் வாய்ப்பினைப் பெற்று தேர்தலில்
குதித்துள்ளார். அவர் இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எவ்வித
வாய்ப்புக்களும் இல்லை என்பது யாவருமறிந்த விடயமாகும்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் தொடர்ச்சியாக கிடைத்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை
இல்லாமல் செய்வதற்காகவே அவர் இவ்வாறு களமிறங்கியுள்ளார். குறிப்பாக
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் முன்னாள் ஆளுநர்
ஹிஸ்புல்லாவுக்கு வாக்களித்தால் நாம் இம்முறை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை
இழக்க நேரிடும். அது தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமமாகும்.
கடந்த
நாடாளுமன்ற தேர்தலில் ஹிஸ்புல்லா தோல்வி அடைந்த போதும் அவருக்கு ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியல் ஆசனத்தினையும் வழங்கி, அமைச்சுக்கள்
மற்றும் ஆளுநர் பதவிகளையும் வழங்கி கௌரவித்தது. ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமாக இருந்து செயற்பட வேண்டிய ஹிஸ்புல்லா கடந்த
ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும், ஜனாதிபதியினை
தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நானே என்றும் சூழுரைத்தார். அப்போது
அவரது முடிவினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரினோம், அவற்றையெல்லாம்
புறக்கனித்துவிட்டு தேர்தலில் குதித்தார்.
இறுதியில்
முஸ்லிம் சமூகத்தினால் புறக்கனிக்கப்பட்டு, மிகக் குறுகிய வாக்குகளையே
அவர் பெற்று வெட்கித் தலைகுனிந்தார். அதுமாத்திரமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம்
சமூகத்தையும் காட்டிக்கொடுத்து, பெரும் அவமானத்தினையும் எதிர்கொண்டார்.
இவரின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் இனவாதிகள்
ஒற்றுமைப்படுவதற்கும், அவர்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கும்
பக்கபலமாக இருந்தது. ஜனாதிபதிக்கு கிடைக்கவிருந்த முஸ்லிம் வாக்குகளும்
இல்லாமல் செய்யப்பட்டு, முஸ்லிம்கள் நடுத்தெருவில் தள்ளிவிடப்பட்டனர்.
ஹிஸ்புல்லாவின்
சுயநல அரசியல் செயற்பாடுகளினால் தான், தேசிய கட்சிகள் அவர் மீது நம்பிக்கை
இழந்து, அக்கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கு
வாய்ப்பளிக்கவில்லை. அதனாலே ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சி ஊடாக
களமிறங்கினார். அவருக்கு வாக்களித்தால் மட்டு, மாவட்டத்தில் தொடர்ச்சியாக
கிடைத்துவரும் முஸ்லிம் பிரதிநித்துவங்களும் இல்லாமல் போகும்.
கடந்த
ஜனாதிபதி தேர்தலில் சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டு முஸ்லிம்களை
நடுத்தெருவில் தள்ளிவிட்டதனைப் போன்று இம்முறை நாடாளுமன்ற தேர்தலிலும்,
முஸ்லிம் வாக்குகளை சிதறடித்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் அரசியல்
அடையாளத்தினை இல்லாமல் செய்வதற்கு ஹிஸ்புல்லா முனைகிறார். அவரின்
செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயற்படுவது காலத்தின்
தேவையாகும்.
இந்த நாட்டிலே
கௌரவத்துடனும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இன்று
நிர்க்கதிக்குள்ளாகி பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதற்கு, இவ்வாறான
அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே காரணமாகும் எனவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
நூருள் ஹுதா உமர்.
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஹிஸ்புல்லா முயற்சி: முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர்....
Reviewed by Author
on
June 22, 2020
Rating:

No comments:
Post a Comment