தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ.1000 மாக அதிகரிக்க பிரதமர் ராஜபக்ஸ தலைமையில் கலந்துரையாடல்........
நேற்று (17) நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், அரச பெருந்தோட்ட யாக்கத்தின் தலைவர், பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட தோட்ட உரிமையாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 700 ரூபாவிற்கு மேலதிகமாக விலைக்கு ஏற்ற கொடுப்பனவு, உற்பத்தி மீதான கொடுப்பனவு, வருகைக்கான கொடுப்பனவு உள்ளடங்கலாக நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்...
கடந்த சில வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட விதம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமளித்ததுடன், குறித்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலின் போது சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படவில்லை என உடனடியாக இறுதித் தீர்மானத்தை அறிவிக்குமாறு பிரதமர் பெருந்தோட்ட உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்ததாகவும் பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment