சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை- உறவுகள்
வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழர் தாயக நிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
செஞ்சோலை சிறார் இல்லம், மருத்துவமனைகள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சிறுவர்கள், பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களிலும் தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அது மட்டுமின்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடிய போதிலும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.
காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து 2012ல் இருந்து 2017ம் ஆண்டு காலப்பகுதிவரை சர்வதேச பாதுகாப்பு சபை வரை தேடியும் தங்களிற்கான நீதி கிடைக்கவில்லை.
இந்த நிலையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதியை கோரியுள்ளோம். இதனூடாகவெனினும் பாதிக்கப்பட்ட எமக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை- உறவுகள்
Reviewed by Author
on
September 30, 2020
Rating:

No comments:
Post a Comment