அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

 இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு   பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில் மன்னாரில் இன்றைய தினம் சனிக்கிழமை(18) காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.


தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் இடம்பெற்றது.


இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடரை அருட்தந்தை நவரட்னம்  அடிகளார் ஏற்றி மாலை அணிவித்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து  மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


-அதனைத் தொடர்ந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இதேவேளை இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை யொட்டி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.


குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,


தமிழின படுகொலையின் பதினைந்து ஆண்டுகள் ஆகியும் எதுவுமே மாறவில்லை.


இனப்படுகொலை நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிய போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை .பல்வேறு விதமான ஆணைக் குழுக்கள் அனைத்தும் பயனற்று போனது.தமிழ் அரசியல்வாதிகளும் ஒழுங்கு முறையான திட்டமிட்ட தொடர் நடவடிக்கை எதையும் இனப்படுகொலை விவகாரத்தை முன்னோக்கி நகர்த்தவில்லை.


அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்கு முறையும் தனிமனித பேச்சு சுதந்திர அடக்கு முறையும் பயங்கரவாத விசாரணைகளும் அச்சுறுத்தல்களும் சிவில் செயற்பாட்டில் ராணுவ தலையிடும், பௌத்த ஆக்கிரமிப்பும் ஏகாதிபத்தியமும் அரசியல் வேற்றுமைகளும் மாற்றுக் கருத்துக்களை முடக்கு வதும் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதும் என தொடர்கிறது.


பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் எந்த மாற்றத்தையும், ஏற்றத்தையும்,  ஏற்படுத்தவில்லை .மாறாக தொடர்ந்து வலியை யே ஏற்படுத்தி வருகிறது.


காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. ஐ .நா மனித உரிமைகள் ஆணையகம் அர்த்தம் இல்லாத நடைமுறைச் சாத்திய மற்ற தீர்மானங்களை காலத்துக்கு காலம் எடுத்ததே தவிர அதனால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எந்த மாறுதலும் நிகழவில்லை வெறும் காகிதங்களுடன் முடங்கிப் போனது.


மனித உரிமை ஆர்வலர்கள் என உலகின் பல பாகங்களிலும் இருந்து இங்கு வந்து எம்மை வேடிக்கை பார்த்தனரே தவிர நீதியை நிலைநாட்ட வில்லை.உலகின் எல்லா கனவான்கள் என வேடம் தரித்தவர்கள்  சேர்ந்தே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றினார்கள். அவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.இந்த உலகம் வலி யோனுக்கு நீதியையும் அறத்தையும் நியம நியதிகளுக்குள் ஒருபோதும் நிலை நாட்டியதாக எங்கும் வரலாறு இல்லை எல்லாம் நலன் சார்ந்த நிகழ் தகவுகளே.



அநீதியை விதைத்தவனிடம் நீதியின்  நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியுமா? இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேசமும் எம்மை தொடர்ந்து ஏமாற்றுகிறது ஏமாற்றியது இனப்படுகொலையின் பங்கு தாரராகியது.



நீதி போதிக்கும் சம தர்மம் மனித உரிமை வாழ்வியல் உரிமை என உச்சரிக்கும் அநீதிக்கு துணை போகும் நீதி இல்லா நாதியற்ற போலி கனவான்களே இனியாவது உங்கள் ஏமாற்று வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள்.இந்த உலகம் இனியும் உங்களை நம்ப தயார் இல்லை. 15 ஆண்டுகளில் உங்கள் ஏமாற்று வித்தைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்புகள் நன்கு உணர்ந்து விட்டன.


ஆகவே எமக்குள் நாம் பேதங்களை கடந்து இனத்துவ ,மொழித்துவ, வாழ்வியல் ,சுயநிர்ணய உரித்துக்களை பெற ஒருமித்து ஒருங்கிணைவதே ஒரே வழி.


 அது தான் எமக்கான நீதியை நாமே பெற்றுக் கொள்வதற்கான வழியும் கூட. 15 ஆண்டுகள் வெறுமையாக பயனின்றி கடந்து விட்டது என்பதே கசப்பான உண்மை.


 இதற்கு வல்லான்மை அற்ற தமிழ் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே தமிழர் ஒரே தேசமாக திரள்வோம். அதுவே நமக்கான இன்றைய தேவை. இல்லையேல் முள்ளிவாய்க்காலில் மரணித்த ஆன்மாக்கள் நம்மை ஒருபோதும் மன்னிக்காது.


அது நிகழாத வரை சிங்கள தேசம் நம்மை பிரித்தாளும் வேலையே தொடர்ந்து செய்யும். ஆகவே விழித்துக் கொள்ள வேண்டியது நாம் தான்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு. Reviewed by Author on May 18, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.