அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுத்தப்படும் வரை 'இடைவிடாத போராட்டம்'

 சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் நாட்டின் முதலாவது திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண கிராம மக்கள் அத்திட்டத்தை முற்றாக நிறுத்துமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு கிராம மக்கள் நேற்று முன்தினம் (ஜூலை 29) பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இத்திட்டத்தினால் கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து சுகாதார சீர்கேடுகளையும் எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.


சுமார் 280 குடும்பங்கள் வசிக்கும் நாவற்காடு கிராமத்தில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் தொலைவில் 30 ஏக்கர் காணியில் இந்தத் திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எனினும் தமது கிராமத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் மேலும் 30 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டு  இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  


மாடு வளர்ப்பு பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கிராமத்தில், இதுபோன்ற திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதால், மாடுகளுக்கான மேய்ச்சல் தரை இல்லாமல் போகும் என  சுட்டிக்காட்டும் கிராம மக்கள், இந்தத் திட்டத்தின் கதிர்வீச்சு காரணமாக ஏற்படக்கூடிய கண் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் குறித்தும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


கிராமத்தின் சனத்தொகை அதிகரித்து வரும் நிலையில் புதிய வீடுகளை கட்டுவதற்கு காணிகளை கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் இயலாத காரியமாக மாறும் என்பதோடு, இதனால் வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக தமது இரத்த உறவுகள் வேறு ஊர்களை நாடிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்த திட்டத்தின் விரிவுபடுத்தலுக்கு கடந்த மார்ச் 3ஆம் திகதி முதல் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாகவும், ஜூலை 29ஆம் திகதி வரையில் வவுணதீவு பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் நான்கு தடவைகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், எனினும் எவ்வித தீர்வு கிடைக்கவில்லை எனவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி திட்டத்தை முழுமையாக நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட நாவற்காடு கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.


“பிரதேசத்தில் குடியிருப்புகள் பெருகியுள்ளன. இந்த சோலார் திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் வீடுகளை அண்மித்த காணிகளும் இதற்கென எடுக்கப்படும். ஆகவே நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் இல்லாமல் போயுள்ளன. இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இங்கிருந்து இதனை அகற்றும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.”


போராட்டத்தின் முடிவில் கிராம மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.


நாவற்காடு கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாக பிரதேச செயலாளர் கிராம மக்களுக்கு உறுதியளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஒக்டோபர் 2022


சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் நாட்டின் முதல் திட்டம், மட்டக்களப்பு, வவுணதீவில் 11 ஒக்டோபர் 2022இல் திறந்து வைக்கப்பட்டது.


இந்த மின் உற்பத்தி நிலையம் வின்ட்போஸ் மற்றும் விது லங்கா அன்ட் ஐ எனர்ஜி (WindForce and Vidu Lanka & Hi Energy) நிறுவனங்களின் முதலீடாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அன்றைய தினம்  தெரிவித்திருந்தார்.


இந்த திட்டத்தின் மூலம் தேசிய மின்சார கட்டமைப்பிற்கு வருடாந்தம் 20 கிகாவொட் மின்சாரத்தை வழங்க முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 




கிழக்கில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுத்தப்படும் வரை 'இடைவிடாத போராட்டம்' Reviewed by Author on July 31, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.