நடைபெற இருந்த ரயில் மறியல் மற்றும் பாம்பன் பாலம் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு: மீனவர்களை விடுதலை செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடரும்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தொண்டி அடுத்த நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை நாட்டுப்படகுகள் உடன் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 1ந் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் நாளை வெள்ளிக்கிழமை பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பின் பேரணியாக சென்று மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ரயில் மறியல் போராட்டத்தை மீனவர்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்த நிலையில் இன்று பாம்பன் தூய மரியன்னை ஆலயத்தில் பாம்பன் நாட்டு படகு மற்றும் தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அந்த கூட்டத்தில் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் விரைவில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக ரயில் மறியல் மற்றும் பாம்பன் பாலம் முற்றுகை போராட்டத்தை ஒத்திவைப்பதாக முடிவு செய்தனர்.
மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை காலை பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் மீனவர்கள் விடுதலையாகும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Author
on
July 04, 2024
Rating:


No comments:
Post a Comment