மறைந்த பெருந்தலைவர் சம்பந்தனின் பதவிக்கு அடைக்கல நாதனுக்கு அதிக வாய்ப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் இயற்கை எய்தியுள்ளமையை அடுத்து அந்தப் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனியாகவும் ரெலோ, புளொட், பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகியன ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாகவும் பாராளுமன்றத்துக்கு வெளியில் செயற்பட்டு வருகின்றன.
எனினும், பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் ரெலோ, புளொட் ஆகியன இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்திலேயே கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தோடு அதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைமைப்பதவியை சம்பந்தனுக்கு வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தன.
அத்தோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் கொறடாவாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் செயற்பட்டு வருகின்றார். இவ்வாறான நிலையில் சம்பந்தனின் மறைவை அடுத்து பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு வெளியில் அரசியல் கட்சி மற்றும் கூட்டணியாக வெவ்வேறாக செயற்பட்டாலும் பாராளுமன்றுக்குள் ஒரே கட்சி போட்டியிட்டமை மற்றும் ஒன்றிணைந்து செயற்படுவது பலம் என்ற வகையில் குறித்த பதவி வெற்றிடத்தினை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், சித்தார்த்தன் ஆகியோர் பாராளுமன்ற அரசியலில் சிரேஷ்டத்துவம் உடையவர்களாக இருக்கின்றபோதும் ரெலோவின் தலைவர் என்ற அடிப்படையில் செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்றக்குழுவின் தலைமைப் பதவியை வகிப்பதற்கு ஆறு உறுப்பினர்கள் இடையே இதுவரையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், கருணாகரம், வினோ நோகராதலிங்கம், சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணக்கப்பாட்டை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், குறித்த தலைமைத் தெரிவு சம்பந்தமாக கொழும்பில் நாளை திங்கட்கிழமை மாலையில் அல்லது செவ்வாய்கிழமை காலை பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் 10 உறுப்பினர்களும் கூடிப்பேசுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது செல்வம் அடைக்கலநாதனின் பெயரை முன்மொழிந்து ஏகமனதாக தெரிவு செய்வதற்கும் பிரயத்தனம் செய்யப்படுமென்று தெரியவருகின்றது.
எனினும். அதேநேரம், செல்வம் அடைக்கலநாதனை குழுக்களின் தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் ஆகியோர் விரும்புவார்களா என்பதிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
சம்பந்தனின் மறைவையொட்டி குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். அவரும் இதனை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்விகள் உள்ளன.
இதன் அடிப்படையில் இந்த நான்கு உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதனின் நியமனத்தை எதிர்த்தால் வாக்கெடுப்புக்குச் செல்வதென்று கூறப்படுகின்றது.
மேலும், செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பு நடத்தப்படுவதை விரும்பாது விலகிக்கொள்வாராயின் சிவஞானம் சிறிதரன் அப்பதவியை பிரதிநிதித்துவம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment