அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் திறன்களை அதிகரிக்க அமெரிக்கா அளித்துள்ள அதி உயர் பரிசு அடுத்த வாரம் கிடைக்கவுள்ளது

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையுமென்பதை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. 

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity நிகழ்ச்சித்திட்டத்தினால் நிதியளிக்கப்பட்ட, 2019இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நன்கொடையானது இலங்கை விமானப் படையுடன் காணப்படும் நீண்டகால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. 

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தலை முறியடித்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் இம்மேம்படுத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்நன்கொடையானது அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை இந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இது கணிசமாக மேம்படுத்தும்.

இலங்கை விமானப்படைக்கு எவ்வித செலவுகளுமின்றி, அமெரிக்க அரசினால் வழங்கப்படும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இம்மானியமானது, விமானம் மற்றும் அதற்கு தேவையான உதவிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

இவ்விமானமானது, அது தொடர்பான அறிமுகம் மற்றும் அதை இயக்குவது தொடர்பான பயிற்சி என்பன நிறைவடைந்த பின்னர், இவ்வாண்டின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை அதிகாரிகள் விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகள் மூன்று மாதகால பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்துவார்கள்.

Beechcraft Textron Aviation நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டின் இறுதியில் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட இவ்விமானமானது, 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதி செய்யப்பட்ட ரேடார் மற்றும் புகைப்படக் கருவிகள் போன்ற கடல்சார் ரோந்துப் பணிக்கு தேவையான உணரிகளை நிறுவுதல் உட்பட மேலதிக மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டது.

அடுத்த வாரம் வருகைதருமென எதிர்பார்க்கப்படும் விமானத்தின் வருகைக்குத் தயாராவதற்காக 2024 ஜூன் முதல் ஓகஸ்ட் மாதம் வரை, கன்சாஸ் மற்றும் புளோரிடாவில் இடம்பெற்ற பயிற்சிகளில் இலங்கை விமானப்படை அதிகாரிகள் பங்கேற்றனர். 

இலங்கையை வந்தடைந்ததும், திருகோணமலை சீனக்குடாவிலுள்ள Maritime Patrol Squadron 3 உடன் இணைந்து கொள்வதற்கு முன்பாக இவ்விமானமானது, இரத்மலானையிலுள்ள விமானப் படைத் தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்குட்படும்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்திலேயே அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


 


இலங்கையின் திறன்களை அதிகரிக்க அமெரிக்கா அளித்துள்ள அதி உயர் பரிசு அடுத்த வாரம் கிடைக்கவுள்ளது Reviewed by Author on September 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.