அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காற்றாலை திட்டத்தை கைவிட்டது அதானி குழுமம் .

 மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அதானி நிறுவனத்தின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபைக்குக் கடிதம் ஒன்று அனுப்பிவைத்துள்ளார்.


484 மெகாவோட் மின்னுற்பத்திக்காக மன்னார் மற்றும் பூனகரியில் புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கும், அதன் சேவையைத் தென்னிலங்கையில் விஸ்தரிப்பதற்கான மேலும் இரண்டு மின்மையங்களை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் அதானி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவிருந்தது.


இதுதொடர்பாக 14 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அதானி நிறுவனம் அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் நடத்தியதாக, இலங்கை முதலீட்டுச் சபைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.


இந்த வேலைத்திட்டத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி மையத்துக்கு எதிரான வழக்கு மற்றும் சுற்றாடல் அறிக்கையைத் தவிர்த்து ஏனைய அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுவிட்டன.


வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளுக்காக 5 மில்லியன் டொலர் வரையில் செலவிடப்பட்டுள்ளது.


எனினும் மின்னுற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் மீண்டும் மீளாய்வு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்துக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அது குறித்து நிறுவனத்தின் நிர்வாக சபையில் கலந்துரையாடப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கைக்கு இருக்கின்ற இறைமையை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள அதானி நிறுவனம், கௌரவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்வதாகவும் அறிவித்துள்ளது.


எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அதானி நிறுவனம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.




மன்னார் காற்றாலை திட்டத்தை கைவிட்டது அதானி குழுமம் . Reviewed by Author on February 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.